சென்னையில் நேற்று நடந்த தி.மு.க., பொதுக்குழுவில், அழகிரி-ஸ்டாலின் ஆதரவாளர் களிடையே
திடீர் மோதல் வெடித்தது. எதிர்பாராத இந்த ரகளையால், அக்கட்சித் தலைவர் கருணாநிதி கடும்
வேதனையடைந்தார். அறிவாலயத்தில் தி.மு.க., பொதுக்குழு நேற்று கூடியது.
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு, கட்சிப்பிரமுகர்கள் பேச
அழைக்கப்பட்டனர். விவாதம், இரண்டாவது கட்டமாக மாலை 4 மணிக்கும் தொடர்ந்தது. திண்டுக்கல்
லியோனி, வழக்கறிஞர் ஜோதி மற்றும் திருச்சி சிவா உள்ளிட்டோர் பேசும் போது, லேசான பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டது. சேலம் மாவட்டச்
செயலர் வீரபாண்டி ஆறுமுகம் பேசும் போது, பரபரப்பு உச்சத்தை அடைந்தது.
பொதுக்குழுவில் அவர் பேசியதாவது: தி.மு.க.,வில் இன்று ஒரு வேதனையான பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒருவரை, "இவர் இன்னாருக்கு வேண்டப்பட்டவர், இவர் அவருடைய ஆள்' என அடையாளம் காட்டும் நிகழ்ச்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. தலைவர் ஆரோக்கியமாக இருந்து, நம்மை எல்லாம் வழி நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், இதுபோல் இன்னொருவரை தலைமைப்பதவிக்கு முன்னிறுத்துவது நல்லதல்ல. ஸ்டாலின், அழகிரி மட்டும்அல்ல, தலைவரின் குடும்பமே நமது இதயம் போன்றது தான். அந்தக் குடும்பத்தில் இருந்து யார் வந்தாலும், அவர்களை வரவேற்கத் தயாராக இருக்கிறோம். அதற்காக, தலைவர் முன்னிலையிலேயே, "இவர் தான் அடுத்த தலைவர்' என்றெல்லாம் பேசுவது உகந்ததல்ல. இவ்வாறு வீரபாண்டி ஆறுமுகம் பேசிக் கொண்டு இருந்தபோதே, பொதுக்குழுவில் அமர்ந்திருந்த கட்சியினர், அவருக்கு எதிராகவும், "தளபதி, தளபதி' என்றும் கோஷமிடத் துவங்கினர். அதற்கு எதிர் கோஷமும் எழுந்தது. பலர், மேடையை நோக்கி முன்னேறினர். இதனால், பொதுக்குழுவில் பெரும் கூச்சலும், குழப்பமும் நிலவியது. "இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்' எனக் கூறிய ஆறுமுகம், தொடர்ந்து பேச முயன்றார். ஆனால், அவரை பேச விடாமல், கட்சிக்காரர்கள் கோஷமிட்டபடி இருந்தனர். மேடையில் இருந்த முன்னணித் தலைவர்களாலும், தொண்டர்களை அமைதிப்படுத்த முடியவில்லை.
இறுதியில் எழுந்த, கட்சியின் பொதுச் செயலர் அன்பழகன் பேசியதாவது: அடுத்த தலைவர் பற்றி பேச்சு எழுந்தபோது, "இது ஒன்றும் சங்கர மடம் அல்ல, வாரிசுகளை அறிவிப்பதற்கு. இது ஜனநாயக அமைப்பு. கட்சி கூடித்தான் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கும்' என, ஏற்கனவே தலைவர் கூறியிருக்கிறார்.
நானும், தலைவரும் இல்லாத தருணங்களில் எல்லாம்
கட்சியை ஸ்டாலின் தான் வழி நடத்தி வந்திருக்கிறார். இனிமேலும், அவர் தான் தலைவராக வேண்டும் என
இருந்தால், அதை யார் தடுத்துவிட முடியும்? அதற்காக, இப்போதே இதுபோன்ற சர்ச்சைகள் எழுவதை
தவிர்க்க வேண்டும். இவ்வாறு அன்பழகன் பேசிய பிறகே, ஒருவாறு அமைதி திரும்பியது. அடுத்ததாக, கட்சித் தலைவர் கருணாநிதியின் பக்கம்
மைக் வைக்கப்பட்ட போது, "அடுத்த பொதுக்குழுக் கூட்டத்தில் பேசுகிறேன்' எனக் கூறி, மைக்கை திருப்பி விட்டு விட்டார்.
தொண்டர்கள் எழுந்து, பெருங்கூச்சலோடு வேண்டுகோள் விடுக்கவே, தொடர்ந்து அவர் பேசியதாவது:
பெரியாரால், அண்ணாவால் பாராட்டுப் பெற்றவன் நான். தலைவர் பதவியில் நீடிக்க
வேண்டும் என ஒருக்காலும் விரும்பியவனல்ல. பொதுக்குழுவில் விவாதத்துக்காக
கொடுக்கப்பட்ட பொருள் தவிர, மற்றவை பற்றி பேசினால், அது பத்திரிகைகளுக்குத் தான் செய்தியாகப்
பயன்படும். இவ்வாறு ஆரம்பித்து விரிவாக பேசிய முன்னாள் முதல்வர் கருணாநிதி, பேச்சின் இடையில் கண் கலங்கினார்.
பொதுக்குழு முடிந்து, நிருபர்களைச் சந்தித்த போது, "அடுத்த தலைவர் யார் என்பதைப் பற்றி
கூட்டத்தில் எந்த விவாதமும் நடக்கவில்லை' என, திட்டவட்டமாக மறுத்தார்.
அழகிரி புறக்கணிப்பு?
* தி.மு.க., தலைவர் கருணாநிதியின் வீட்டில் இருந்து, அறிவாலயம் வரை, சாலையின் இரு புறமும் கட்சிக்கொடிகள், தோரணங்கள், குழல் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.
அழகிரி புறக்கணிப்பு?
* தி.மு.க., தலைவர் கருணாநிதியின் வீட்டில் இருந்து, அறிவாலயம் வரை, சாலையின் இரு புறமும் கட்சிக்கொடிகள், தோரணங்கள், குழல் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.
* மதிய வேளையில், 2,500 பேருக்கு சைவ சமையல் தயாரித்து வழங்கப்பட்டது.
* காலையில், 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாலையில், சேது சமுத்திர திட்டத்தை வலியுறுத்தி ஒரு தீர்மானமும், பொதுக்குழு விளக்கக் கூட்டங்கள் நடத்துவது பற்றிய இன்னொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
* கூட்டம் நடந்த கலைஞர் அரங்கம் அருகே வரை செல்ல, காலையில் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
மாலையில், கூட்டம் முடியும் வரை, அந்த கட்டடத்துக்கு உள்ளேயே
அனுமதிக்கப்படவில்லை.
* கூட்டத்தில் பேசிய பலர், காங்கிரசுடனான கூட்டணியை முறிக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு, தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும், கைதட்டலும் இருந்தது.
* திண்டுக்கல் லியோனி பேசுகையில், "மொபைல் போனும், கையுமாக கட்சியினர் நடந்து கொள்வதைப் பார்க்கும்போது, தி.மு.க., இன்னமும் ஆட்சியில் தான் இருக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது' என்றார்.
* "தேர்தலில், பணக்காரர்களுக்குத் தான் சீட் கொடுக்கப்படுகிறது' என, வழக்கறிஞர் ஜோதி பேசியபோது, பெரும் ஆதரவு அலை எழுந்தது. "நீ பார்த்தியா' என ஒருவர் சத்தம் போட, அவரைக் கண்டித்தும், ஜோதியை ஆதரித்தும் பெரும் கூச்சல் ஏற்பட்டது.
* "தி.மு.க.,வுக்கு இரண்டு சேனல்கள் இருக்கின்றன. பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க, கலைஞர் "டிவி'யைப் போலவே, அந்த இன்னொரு சேனலும் செயல்பட வேண்டும்' என, திருச்சி சிவா பேசியபோது எழுந்த கைதட்டல் அடங்க, நெடுநேரம் ஆனது.
* காலையில், பொதுக்குழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, கட்சியினர் பேச அழைக்கப்பட்ட உடன், மத்திய அமைச்சர் அழகிரி, அரங்கை விட்டு வெளியேறினார். மாலையில், நடந்த விவாதத்தில் அவர் பங்கேற்கவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக