கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 29 டிசம்பர், 2012

ஆண் குழந்தை யாருக்கு சொந்தம்?: பெற்றோர்- குழந்தைகளுக்கு டி.என்.ஏ. பரிசோதனை

திருத்தணியை அடுத்த முருகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்தினம். இவரது மனைவி கவுதமி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. மீண்டும் கர்ப்பமான கவுதமி பிரசவத்திற்காக எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதேபோல் பூந்தமல்லியை அடுத்த வேலப்பன் சாவடியை சேர்ந்த அன்பரசு மனைவி அருணா 3-வது பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார்.
 
இருவருக்கும் ஒரே நாளில் (27-ந்தேதி) அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகள் பிறந்தது. முதலில் கவுதமிக்கு ஆண்குழந்தை பிறந்ததாக அறிவிக்கப்பட்டு அவரது கணவரிடம் குழந்தையை காண்பித்தார்கள். அடுத்ததாக அருணாவுக்கு பெண் குழந்தை பிறந்ததாக கூறி அவரது கணவரிடமும் குழந்தையை காட்டி கையெழுத்து பெறப்பட்டது.
 
அடுத்த ஒரு மணி நேரத்தில் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. முனிரத்தினம்- கவுதமிக்கு பெண் குழந்தைதான் பிறந்தது. ஆண் குழந்தை பிறக்கவில்லை. இரண்டு பெண்களும் அருகருகே இருந்ததால் குழந்தை மாறிவிட்டது. நாங்கள் செய்த தவறை பெரிதாக்க வேண்டாம் என ஆஸ்பத்திரி ஊழியர்கள் முனிரத்தினத்திடம் முறையிட்டனர்.
 
குழந்தையை திடீரென மாற்ற கூறியதால் அவர் அதிர்ச்சி அடைந்ததோடு மட்டுமல்லாது அதை ஏற்க மறுத்தார். எனக்கு ஆண் குழந்தைதான் பிறந்தது. அந்த குழந்தைதான் வேண்டும் என போர்க்கொடி தூக்கினார். இதனால் குழந்தை மாறிய விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
 
இதற்கிடையில் தனக்கு பிறந்த ஆண்குழந்தையை என்னிடம் ஒப்படையுங்கள் என அன்பரசு ஒரு புறம் பிரச்சினையை கிளப்ப, இரண்டு பெற்றோர்களும், உறவினர்களும் ஆஸ்பத்திரியில் திரண்டுவிட்டனர். ஆண் குழந்தையை கேட்டு 2 பெற்றோர்களும் முரண்டு பிடிப்பதால் டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்படுகிறது.
 
பிரச்சினைக்குரிய 2 குழந்தைகள், அவர்களுடைய 2 பெற்றோர்கள் ஆகிய ஆறு பேருக்கும் இந்த சோதனை விரைவில் நடத்தப்படுகிறது. அவர்களுடைய ரத்தங்களை எடுத்து சோதனை செய்வதால் இதன் முடிவு 2 வாரத்தில் தெரியும். டி.என்.ஏ. மருத்துவ முடிவை 2 பெற்றோர்களும் ஏற்க சம்மதம் தெரிவித்துள்ளனர். அதனால் இந்த உயர்ந்த அதிக செலவிலான மருத்துவ பரிசோதனை முடிவை இரு குடும்பத்தினரும் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.
 
இந்த தவறுக்கு காரணமான ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து இதுவரை மருத்துவ நிர்வாகம் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும், இது மிக சாதாரண மனித தவறு என்று மருத்துவமனை ஆர்.எம்.ஏ. தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக