கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 29 டிசம்பர், 2012

காற்றழுத்த தாழ்வு : நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை

நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை பெய்யாமல் ஏமாற்றியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து வடகிழக்கு பருவ மழையை நம்பி இருந்தனர். ஆனால் வடகிழக்கு பருவ மழையும் பொய்த்து போனதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். புயல் சின்னம் உண்டானால் மட்டுமே மழை பெய்யும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த பருவ மாற்றங்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

இந்த நிலையில் வங்கக்கடலில் 1 வாரமாக நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு நிலையினால் நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று மாலை முதல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. பரவலாக லேசான தூறலுடன் மழை பெய்தது.

ஏற்கனவே கடும் பனிப்பொழிவால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வந்தது. இந்த வேளையில் தற்போது பெய்து வரும் லேசான மழை மேலும் குளிரை ஏற்படுத்தி உள்ளது. மலைப்பகுதியில் பெய்து வரும் மழையினால் அணைகளுக்கு நீர்வர தொடங்கி உள்ளது. எனினும் அணைகளில் நீர்மட்டம் உயரும் அளவுக்கு பெரிய மழை இல்லாததால் நீர்மட்டம் பழைய நிலையிலேயே உள்ளது.

பாபநாசம் அணை நீர்மட்டம் 58.70 அடியாக உள்ளது. இங்கு வினாடிக்கு 379 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து பாசனத்துக்காகவும், குடிநீர் தேவைக்காகவும் 605 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. சேர்வலாறு அணை 69.09 அடியாக உள்ளது. மணி முத்தாறு அணை நீர்மட்டம் 71.67 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 144 கன அடி தண்ணீர் வருகிறது. 35 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

கடனா அணை நீர்மட்டம் 60.50 அடியாகவும், ராமநதி அணை 54.25 அடியாகவும், கருப்பாநதி அணை 51.84 அடியாகவும் உள்ளது. இதே போல் குண்டாறு அணை 33.45 அடியாகவும், வடக்கு பச்சையாறு 20.50 அடியாகவும், நம்பியாறு 18.24 அடியாகவும் உள்ளது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 10.75 அடியாகவும், அடவி நயினார் அணை நீர்மட்டம் 64 அடியாகவும் உள்ளன.

அணைப்பகுதியில் பாபநாசம் அணையில் 2 மி.மீ. மழையும், சேர்வலாறில் 5 மி.மீ. மழையும், மணிமுத்தாறில் 1.2 மி.மீ. மழையும், ராமநதி, கருப்பாநதி அணையில் தலா 2 மி.மீ. மழையும் பெய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக