கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

திங்கள், 3 டிசம்பர், 2012

கடையநல்லூர் அரசு கல்லூரியில் கம்ப்யூட்டர், நூலக வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் அவதி

kadayanallur
செமஸ்டர் தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில் கல்லூரி படிப்பிற்கான கம்ப்யூட்டர்கள், நூலக வசதியில்லாததால் கடையநல்லூர் அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.கடையநல்லூரில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சார்பில் உறுப்பு கல்லூரி நடப்பு கல்வியாண்டு முதல் துவங்கப்பட்டுள்ளது. பிஏ., பிஎஸ்சி, கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை கொண்டு இக்கல்லூரி துவங்கப்பட்டது. முதலாம் ஆண்டிலேயே இக்கல்லூரியில் சேர்வதற்கு கடையநல்லூர் மற்றும் சுற்றுப்பகுதி மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.
கல்லூரி துவங்கப்பட்டு வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 3 மாதங்கள் முடிவடைந்த நிலையில் அடுத்த மாதம் செமஸ்டர் தேர்வுகள் நடக்க கூடுமென தெரிகிறது. இந்நிலையில் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வி நலனை கருத்தில் கொண்டு அடிப்படை வசதிகள் மற்றும் தளவாட பொருட்கள் வாங்குவதற்கு பல்கலைக்கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது.
இருந்தபோதிலும் தற்போது கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அது தொடர்பான படிப்பினை தொடர இதுவரை கம்ப்யூட்டர்கள் கல்லூரியில் அமைக்கப்படவில்லை என தெரிகிறது. மேலும் கல்லூரி படிப்பினை பொறுத்தவரை முக்கியமாக கருதக்கூடிய நூலக வசதியும் அமைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கல்லூரியில் படிக்கும் முதலாமாண்டு மாணவ, மாணவிகள் தேர்வு நெருங்கி வரும் நிலையில் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.அரசு கல்லூரியில் மாணவ, மாணவிகளின் வசதிக்காக அமைக்கப்பட வேண்டிய இருக்கை வசதியும் இதுவரை முறையாக மேற்கொள்ளப்படவில்லை. சமீபத்தில் நடந்த தேர்வுகளை எழுதுவதற்கு வாடகைக்கு சேர்கள் எடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு அதிமுக நிர்வாகிகள் இதற்கான பணிகளை செய்தனர்.இருந்தபோதிலும் அடுத்தடுத்து தேர்வுகள் நெருங்கி வருவதால் இருக்கைககள் மற்றும் கம்ப்யூட்டர், நூலக வசதியை தாமதமின்றி போர்க்கால அடிப்படையில் உடனடியாக வழங்கிடவேண்டுமெனபெற்றோர்களும், மாணவ, மாணவிகளும் வலியுறுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக