கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 4 பிப்ரவரி, 2012

இ-டிக்கெட் முன்பதிவு செய்து விட்டு எஸ்.எம்.எஸ். தகவலை காட்டி ரெயிலில் பயணம் செய்யலாம்: ரெயில்வே அறிவிப்பு


ரெயிலில் பயணம் செய்ய இ-டிக்கெட் முறையில் முன்பதிவு செய்தால், அந்த டிக்கெட்டை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொண்டுதான் தற்போது ரெயிலில் பயணம் செய்து வருகிறோம்.
 
இந்நிலையில், இ-டிக்கெட் பயணிகளுக்கு புதிய நடைமுறையை ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, இ-டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளின் செல்போனுக்கு ரெயில்வே அமைச்சகத்தைச் சேர்ந்த இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம்(ஐ.ஆர்.சி.டி.சி.) எஸ்.எம்.எஸ். அனுப்பி வைக்கும்.
 
அந்த செல்போனில், இ-டிக்கெட்டில் உள்ள அனைத்து விவரங்களும் இடம் பெற்று இருக்கும். ஒரே டிக்கெட்டில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச பயணிகள் அனைவரது பெயரும் இருக்கும். பி.என்.ஆர். எண், ரெயில் எண், பயண தேதி, பயண வகுப்பு, பெட்டி மற்றும் படுக்கை எண், செலுத்தப்பட்ட கட்டண விவரம் ஆகிய அனைத்து விவரங்களும் இடம் பெற்று இருக்கும்.
 
ரெயில் பயணத்தின் போதோ அல்லது ரெயில் நிலையத்தை விட்டு வெளியேறும் போதோ இந்த எஸ்.எம்.எஸ். தகவலை டிக்கெட் பரிசோதகரிடம் காட்டினால் போதும். இ-டிக்கெட் பிரிண்ட் நகலுக்கு இணையாக இது கருதப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
 

அதே சமயத்தில், இந்த எஸ்.எம்.எஸ். தகவலுடன், கீழ்கண்ட ஏதாவது ஒரு அடையாள ஆவணத்தின் அசலை காண்பிக்க வேண்டும் என்றும் ரெயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.
 
1. வாக்காளர் அட்டை. 2. பான்கார்டு, 3. ஓட்டுனர் உரிமம். 4. மத்திய, மாநில அரசுகள் வழங்கிய வரிசை எண்ணுடன் கூடிய புகைப்பட அடையாள அட்டை. 5. பள்ளி, கல்லூரிகள் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய மாணவர் அடையாள அட்டை. 6. புகைப்படத்துடன் கூடிய தேசியமயமாக்கப்பட்ட வங்கி பாஸ்புக். 7. லேமினேட் செய்யப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வங்கிகளின் கிரெடிட் கார்டு. 8. ஆதார் அடையாள அட்டை.
 
எந்த பயணியாவது, எஸ்.எம்.எஸ். தகவலை காட்ட முடியாவிட்டால், அவர் மேற்கண்ட அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை வைத்திருந்தால் கூட, அவருக்கு டிக்கெட் ஒன்றுக்கு ரூ.50 வீதம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக