கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

புதன், 8 பிப்ரவரி, 2012

இருதரப்பினர் மோதல் எதிரொலி: சங்கரன்கோவிலில் பதட்டம் நீடிப்பு- 1000 போலீசார் குவிப்பு




நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் கழுகுமலை சாலையில் உள்ளது காந்திநகர். இங்குள்ள காளியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. விழாவையொட்டி நேற்று இரவு 8.30 மணிக்கு சாமி ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வல பாதையில் ஒரு பள்ளிவாசல் உள்ளது. வழக்கமாக பள்ளிவாசல் அருகே வந்ததும் ஒரு நிமிடம் மேளதாளத்தை நிறுத்தி செல்வார்களாம். இந்த முறை ஊர்வலத்தின் போது பள்ளிவாசல் அருகே வந்ததும் மேளதாளம் நிறுத்தாமல் சென்றதோடு பட்டாசும் வெடிக்கப்பட்டது.
 
இதை ஒரு தரப்பினர் தட்டிக்கேட்டனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு பெரிய மோதலாக உருவெடுத்தது. இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். கற்கள் வீசப்பட்டன. செருப்பு வீசப்பட்டது. வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மேலும் சில வாகனங்களின் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது.
 
இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டனர். கலவரக்காரர்களை நோக்கி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். வானத்தை நோக்கி துப்பாக்கியாலும் சுட்டனர். மேலும் போலீசார் தடியடி நடத்தி கலவரக்காரர்களை விரட்டினர்.
 
இந்த மோதலில் ஒரு தரப்பை சேர்ந்த நாகராஜ் (வயது 30), காளிராஜ் (42), பெருமாள் (70), ராமகிருஷ்ணன் (37), இன்னொரு காளிராஜ் (35), தமிழக மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளர் சக்திபாண்டியன் (23), பெரியசாமி (48), சசிகுமார் (18), சுமியன்(30), வேல்சாமி (52), சுரேஷ் (23), முத்து (37), லட்சுமணன் (32), ராஜசேகர் (31), ஈஸ்வரி (35) ஆகிய 16 பேர் காயம் அடைந்தனர்.
 
மற்றொரு தரப்பில் செய்யது தமீம் மிர்சா (20), பீர்மைதீன் (32) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. கலவரக்காரர்கள் தாக்கியதில் போலீஸ் சப்- இன்ஸ் பெக்டர்கள் சுதா, ராஜகோபால், சொக்கலிங்கம் உள்பட 6 போலீசாருக்கும் காயம் ஏற்பட்டது.
 
காயம் அடைந்தவர்கள் சங்கரன்கோவில், பாளை அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதில் 4 மோட்டார் சைக்கிள்கள், ஒரு வேன், கார் எரிந்து சேதமானது. மேலும் 4 ஆட்டோ, 2 லாரிகள், ஒரு கார் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தன.
 
10-க்கும் மேற்பட்ட கடைகளின் முன்பகுதி சேதப்படுத்தப்பட்டன. ஒரு பேன்சி ஸ்டோர் முழுவதும் அடித்து நொறுக்கப்பட்டது. சில இடங்களில் கடைகள் சூறையாடப்பட்டன. இரவு முழுவதும் அப்பகுதியில் பதட்டம் நீடித்தது. இதனால் மாவட்டத்தின் பிற பகுதியில் இருந்தும் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
 
சம்பவ இடத்துக்கு போலீஸ் ஐ.ஜி. ராஜேஸ்தாஸ், டி.ஐ.ஜி. வரதராஜு, நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதரி மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் சங்கரன் கோவிலிலேயே முகாமிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
 
கலெக்டர் செல்வராஜ் சம்பவ இடத்தை பார்த்தார். மோதல் சம்பவம் எதிரொலியாக சங்கரன்கோவிலில் இன்றும் தொடர்ந்து பதட்டம் நீடிக்கிறது. போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கலவரம் நடந்த பகுதியில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அந்த வழியே கழுகுமலை செல்லும் பஸ்களும், சங்கரன்கோவில் வரும் பஸ்களும் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.
 
இதனிடையே போலீசார் மற்றும் அதிகாரிகள் இரவு இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று காலை நெல்லை ஆர்.டி.ஓ. இளங்கோ தலைமையில் சமாதான கூட்டம் நடத்தப்பட்டது. இதில் இரு தரப்பை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் மோதல் குறித்து இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து சங்கரன்கோவிலில் பதட்டம் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக