கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

மதுரை அருகே கிணற்றுக்குள் பாய்ந்த வேன்: 10 பேர் பலியான பரிதாபம்

மதுரை அருகே, கிணற்றுக்குள் வேன் பாய்ந்ததில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கிணற்றில் 25 அடி வரை தண்ணீர் இருந்ததால் அவர்கள் தப்ப முடியாமல் தண்ணீரில் மூழ்கி உயிர் இழந்தனர்.

தேனி மாவட்டம் தேவாரத்தை சேர்ந்தவர், சதீசுவரன். இவர் சென்னையில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் தூத்துக்குடி 3-ம் மைல் பகுதியை சேர்ந்த சித்திரைவேல்-முருகம்மாள் தம்பதியின் மகள் உமா என்பவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்தது.

திருமணத்துக்குப்பின் மணமக்களை, பெண்ணின் உறவினர்கள் தேவாரத்தில் உள்ள மணமகனின் வீட்டில் கொண்டு விடுவதற்காக ஒரு வேனில் தேவாரத்திற்கு சென்றனர். அங்கு மணமக்களை மணமகன் வீட்டில் விட்டபின் அனைவரும் அந்த வேனில் தூத்துக்குடிக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர்.

வேன் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வழியாக திருமங்கலம் நோக்கி வந்து கொண்டு இருந்தது.

நக்கலக்கோட்டை அருகே இரவு 7 மணி அளவில் வந்தபோது நிலைதடுமாறிய வேன் அருகே உள்ள கிணற்றுக்குள் பாய்ந்தது. 

இதனால் வேனுக்குள் இருந்தவர்கள் தண்ணீருக்குள் மூழ்கினார்கள். வேன் கிணற்றுக்குள் விழுந்தபோது ஏற்பட்ட பயங்கர சத்தத்தை கேட்டும், வேனில் இருந்தவர்களின் மரண ஓலத்தை கேட்டும் நக்கலக்கோட்டை கிராம மக்கள் அங்கு ஓடிவந்தனர். 

கிணற்றுக்குள் 3 பேர் தத்தளித்துக்கொண்டு இருந்ததை பார்த்த வாலிபர்கள் கிணற்றுக்குள் குதித்து அந்த 3 பேரை மீட்டனர். அவர்களில் ஒருவர் விருதுநகர் நகர தி.மு.க. முன்னாள் செயலாளர் ராஜாக்கனியின் மகன் மாதவன், மணி, சாயல்குடியை சேர்ந்த கருப்புச்சாமி என்று தெரியவந்தது. 

கிணற்றின் அருகே மின்விளக்கு வசதியும் இல்லாததால் அங்கிருந்தவர்கள் டார்ச்லைட், மண்எண்ணை விளக்கு, பெட்ரோமாக்ஸ் விளக்கை கொண்டு வந்தனர்.

அதற்குள் தீயணைப்பு படையினரும் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி வேனுக்குள் இருப்பவர்களை மீட்க போராடினர்.

அந்த கிணறு 50 அடி ஆழ கிணறாக இருந்தது. அதில் 25 அடிக்கும் அதிகமாக தண்ணீர் இருந்ததாலும், இருளாக இருந்ததாலும் தீயணைப்பு படையினரின் மீட்பு பணியிலும் சிக்கல் ஏற்பட்டது. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு 10 பேர் உடல்கள் மீட்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக