கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 4 பிப்ரவரி, 2012

ஓமலூர் அருகே இன்று அதிகாலை பயணிகள் கூட்டத்தில் கண்டெய்னர் புகுந்து 3 பேர் பலி


சேலம் மாவட்டம் தின்னப்பட்டியில் இருந்து இன்று அதிகாலை சேலம் நோக்கி ஒரு அரசு டவுன் பஸ் வந்து கொண்டு இருந்தது. இந்த பஸ்சுக்காக ஓமலூர் மெயின் ரோடு குப்பூர் என்ற பகுதியில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காத்திருந்தனர். அதிகாலை 5 மணியளவில் பஸ் குப்பூர் வந்ததும் பயணிகள் பஸ்சில் ஏறிக் கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி ஒரு கண்டெய்னர் லாரி வேகமாக வந்தது.  


 
அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி பயணிகள் கூட்டத்தில் புகுந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் சுதாரித்துக் கொண்டு பஸ்சுக்குள் புகுந்து கொண்டனர். சிலர் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு தப்பினர். ஆனால் என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் 7 பேர் மீது கண்டெய்னர் லாரி மோதி நின்றது.
 
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பலியாகி விட்டனர். சிலர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக ஓமலூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. டி.எஸ்.பி. முத்துகருப்பன், இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர்.
 
ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டு படுகாயம் அடைந்தவர்களையும், இறந்த வர்களின் உடல்களையும் மீட்டு ஓமலூர், மற்றும் சேலம் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் வழியில் மேலும் ஒருவர் இறந்து விட்டார். இதனால் சாவு எண்ணிக்கை 3-ஆக உயர்ந்தது.  
 
விபத்தில் பலியானவர்களில் 2 பேரின் அடையாளம் மட்டும் தெரியவந்திருக்கிறது. ஒரு பெண் அடையாளம் தெரியவில்லை. இறந்தவர்களில் ஒருவர் சித்தையன், மற்றொருவர் முருகேசன் (40) கோட்ட கவுண்டம்பட்டியை சேர்ந்தவர். (இவர் தான் ஆஸ்பத்திரிக்கு வரும் வழியில் இறந்தவர்). இறந்த பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் முருகேசனின் மனைவி காந்தரூபி (32), காமலாபுரத்தை சேர்ந்த மண்ணாதன் (60), நாலுகால் பாலத்தை சேர்ந்த பெருமாள் (52), புதூர் பண்ணப்பட்டியை சேர்ந்த செல்லப்பன் (30) ஆகியோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
 
விபத்தை ஏற்படுத்திய கண்டெய்னர் லாரியின் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் போக்குவரத்தை சரிசெய்தனர். பயணிகள் கூட்டத்தில் புகுந்த கண்டெய்னர் லாரியின் டிரைவர் விபத்து நடந்தவுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
 
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் லாரியில் இருந்து செல்போன் மூலம் அதன் உரிமையாளரை தொடர்பு கொண்டு விசாரித்தார். அப்போது அவர் டிரைவர் தற்போது தான் விபத்து நடந்த விபத்தை கூறினார். அவர் அந்த பகுதியில் எங்கேயோ பதுங்கி உள்ளார் என்றார்.
 
இதையடுத்து போலீசார் அருகில் உள்ள வனப்பகுதியில் அவர் தஞ்சம் அடைந்து இருக்கலாம் என்ற அடிப்படையில் அவரை தேடிவருகிறார்கள். சேலம், மற்றும் ஓமலூருக்கு செல்வதற்காக பயணிகள் நின்று இருந்தனர். அதிகாலை நேரத்தில் குளிர் அதிகளவில் இருந்ததால் பயணிகள் சால்வை அணிந்து காணப்பட்டனர். அப்போது பஸ் ஏறி கொண்டு இருந்த நேரத்தில் கீழே நின்றிருந்தவர்கள் மீது கண்டெய்னர் மோதி விபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதை ஓட்டி வந்த டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தான் அவர் பயணிகள் கூட்டத்தில் லாரியை ஓட்டி சென்று மோதி விபத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்று போலீசாரின் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
 
பஸ்சுக்கு காத்திருந்த மக்கள் கூட்டத்திற்குள் கண்டெய்னர் லாரி புகுந்து விபத்தானதையடுத்து 3 பேர் இறந்து விட்டனர். 4 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
 
இதுப்பற்றி தெரியவந்ததும் அவர்களின் உறவினர்கள் அலறியடித்துக் கொண்டு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்கள் இறந்தவர்களின் உடல்களை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.இதனால் காலை நேரத்திலயே ஆஸ்பத்திரி வளாகம் பரபரப்படைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக