கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

புதன், 8 பிப்ரவரி, 2012

மூன்று பெண்களை மணந்த "ஜாலி' கணவன் மீது நான்காவது பெண் புகார்



பெண் எஸ்.ஐ., உள்ளிட்ட மூன்று பெண்களைத் திருமணம் செய்து கொண்டதுடன், மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சித்த, " திருமண மன்னன்' மீது முதல் மனைவி, கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், கே.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் அமுதா, 37. இவரது கணவர் முருகன்,42. இவர்கள் இருவருக்கும், ராஜா என்ற மகனும், ராதா என்ற மகளும் உள்ளனர். நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த அமுதா, தன் கணவர் மீது, புகார் மனு ஒன்றை அளித்தார். அப்புகாரில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன், தொழில் செய்வதற்காக சென்னை வந்த கணவர், இரண்டு முறை ஊருக்கு வந்தார். அதன் பின், நான்கு மாதங்களாக ஊருக்கு வரவில்லை. வராதது குறித்து, உறவினர்கள் மூலம் விசாரித்தபோது, தலைமைச் செயலக பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் பெண் எஸ்.ஐ., ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டதாகவும், இது குறித்து, பெண் எஸ்.ஐ.,யிடம் கேட்டபோது, அவர் கணவரை அனுப்பாததுடன் மிரட்டுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் குறிப்பிட்டிருந்தார். ராயபுரம் போலீஸ் குடியிருப்பில் ஸ்ரீதேவி வசிப்பதால், ராயபுரம் போலீஸ் விசாரணைக்கு கமிஷனர் அலுவலகத்தில் இருந்து பரிந்துரைக்கப்பட்டது.

என் எதிரிலேயே இரண்டாவது மனைவி
புகார் தொடர்பாக அமுதா கூறியதாவது: கடந்த 1991ம் ஆண்டு, எங்களுக்கு திருமணம் நடந்தது. அப்போது சென்னையில் ஆட்டோ ஓட்டிவந்தார். பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்த நிலையில், அவர் புதுப்பட்டிக்கு வந்து, நகைக்கடை வைத்து நடத்தி வந்தார். நகைக்கடை தொழிலின்போது, கோவை, அவினாசியைச் சேர்ந்த விதவையான சித்ரகலாவிற்கும், என் கணவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது. தனக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் இருப்பதை மறைத்த அவர், சித்ரகலாவை திருமணம் செய்து, பலமுறை வீட்டிற்கே அழைத்து வந்தார்.

இது குறித்து, திருமயம் போலீசில் புகார் அளித்த நிலையில், அப்பெண் பிரிந்து சென்று விட்டார். அதன் பின், திருப்பூரில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்த, லட்சுமி என்ற இலங்கை பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அவருடன் திருமணமாகாமலேயே குடும்பம் நடத்தி வந்தார். அப்பெண், முதல் மனைவியை விவாகரத்து செய்து வந்தால், திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியதால், என்னை கொடுமைப்படுத்தினார். அதன் பின், ஒரு நாள் அப்பெண், வீட்டிற்கு வந்து பார்த்தபோது, நிலைமை புரிந்ததால், அப்பெண் விலகி சென்று விட்டார்.

இவ்வாறு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிந்ததால், பிரச்னை ஏற்பட்டது. இதற்கிடையில், தொழில் நஷ்டம் காரணமாக, நகைகளுடன் சென்னைக்கு வந்து, பெண் எஸ்.ஐ.,யை திருமணம் செய்துள்ளார். அவர், என் மகனுக்கு எழுதி வைத்த சொத்தும் கூட, செல்லாத சொத்தாக உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

"திருமணம் செய்யவில்லை'
இதுகுறித்து, அமுதாவின் கணவர் முருகனிடம் பேசியபோது, மனைவியின் நடத்தை சரியில்லாததால் தான், ஊரை விட்டு வந்ததாகவும், பெண் எஸ்.ஐ.,யுடன் நட்பாக பழகியதாகவும், திருமணம் செய்யவில்லை என்றும், அந்த முடிவும் இல்லை என்றும் தெரிவித்தார்.

"ஒண்ணு' தான் எனக்கு தெரியும்'முருகனின் இந்த கூற்று, உண்மைதானா என்பதை அறிய, நான்காவது பெண்ணாகிய ஸ்ரீதேவியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: நான் தாயை விட்டு பிரிந்து, தனியாக வசித்து வருகிறேன். வயது அதிகம் ஆனதால், ஆண் துணை வேண்டி, புரோக்கர் ஒருவர் மூலம் முருகனை சந்தித்தேன். தான் அனாதை என்று கூறியதை நம்பி, திருமணத்திற்கு சம்மதித்தேன். நானும் அவரும், கடந்தாண்டு அக்டோபர் மாதம் 9ம் தேதி, நண்பர்கள் முன்னிலையில் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டோம். அதன்பின், ராயபுரம் போலீஸ் குடியிருப்பில் வரவேற்பு நடந்தது.

இரண்டு மாதங்களில் அவரை பற்றி தெரிய வந்ததால், நான் அவரை அனுப்பி விட்டேன். ஒரு திருமணம் செய்த விஷயம் தான், அப்போது எனக்கு தெரிந்தது. பலரைத் திருமணம் செய்து ஏமாற்றிய விவரம் தற்போது தான் எனக்கு தெரிந்தது. நானும், முருகன் மீது நடவடிக்கை கோரி புகார் செய்ய உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். அமுதா அளித்த புகாரின் மீதான விசாரணை, இன்று ராயபுரம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் நடக்கிறது. அப்போது, முருகன் ஏமாற்றிய பெண்கள் பட்டியல், இன்னும் நீளும் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக