கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

நெல்லை மாவட்டத்தில் மின் வெட்டு இன்வெட்டர் விற்பனை அதிகரிப்பு


நெல்லை மாவட்டத்தில் அமல்படுத்தப்படும் அறிவிக்கப்படாத மின் வெட்டை சமாளிக்க வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இன்வெட்டர் பொருத்த மக்கள் ஆர்வம்காட்டுவதால் அதன் விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் எலக்ட்ரானிக் பொருட்களின் உபயோகம், தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் மின் தேவை அதிகரித்து வருகிறது. மின் தேவையை சமாளிக்க போதிய மின் உற்பத்தி இல்லாததால் ஆயிரம் மெகா வாட் வரை மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனை சமாளிக்க தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின் வெட்டை மின்வாரியத்தினர் கடந்த சில வாரங்களாக அமல்படுத்தி வருகின்றனர். இதனால் கோவை, ஈரோடு, சேலம், திருச்சி போன்ற தொழில் நகரங்களில் தொழிற்சாலைகளில் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கண்ட பகுதிகளில் தொழிற்சாலைகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மின் வெட்டை கண்டித்து தொழிற்சாலை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதுபோல் நெல்லை மாவட்டத்திலும் விசைத்தறி கூடங்கள், நெல் அரவை ஆலைகள், சுண்ணாம்பு ஆலைகள், நூற்பாலைகள் மற்றும் மின்சாரத்தை நம்பியுள்ள சிறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகளுக்கும் மின் வெட்டு அமலில் உள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இரவு நேரங்களிலும் அவ்வப்போது மின்வெட்டு ஏற்படுவதால் அரசு தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் படிக்கமுடியாமலும், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகள் இரவில் தூக்கமின்றியும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கோடைகாலம் துவங்கும் முன் மின் வெட்டு நேரம் 8 மணி நேரமாக அதிகரித்துள்ளது. வரும் ஏப்ரல், மே மாதத்தில் மின் வெட்டு நேரம் மேலும் அதிகரிக்க கூடும் என்ற அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது.

இன்வெட்டர் விற்பனை அதிகரிப்பு
இதனை சமாளிக்க வசதி படைத்தவர்கள் தங்களது வீடுகளில் இன்வெட்டர்களை வாங்கி பொருத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் நெல்லை மாவட்டத்தில் பேட்டரி கடைகள், ஆட்டோ மொபைல் கடைகள், இன்வெட்டர் ÷ஷாரூம்களில் இன்வெட்டர் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது.
நெல்லையில் குறைந்தபட்சம் 300 வாட்ஸ் திறன் கொண்ட இன்வெட்டர்கள் முதல் அதிகபட்சம் ஆயிரம் வாட்ஸ் திறன் கொண்ட இன்வெட்டர்கள் வரை விற்பனைக்கு வைத்துள்ளனர். இன்வெட்டர்கள் தயாரிக்கும் கம்பெனிகளுக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இன்வெட்டர்களுக்கு 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை உத்ரவாதம் வழங்குகின்றனர். இந்த இன்வெட்டர்களை பொருத்துவதன் மூலம் பகல் நேரத்தில் வீடுகள் மற்றும் அலுவலகத்தில் 300 வாட்ஸ் இன்வெட்டர் மூலம் குறைந்தபட்சம் டியூப் லைட்கள் மற்றும் பேன்கள் இயங்குவதற்கான மின்சாரத்தை பெற முடியும் என்பதால் பகல் நேரத்தில் வெயிலின் கொடுமையில இருந்து தப்பிக்க முடிவதோடு, இரவு நேரங்களில் மாணவர்கள் படிக்கவும், குழந்தைகள், நோயாளிகள் தூங்கவும் வழி வகை ஏற்படுகிறது.

அரிகேன் விளக்கிற்கு மவுசு
அதிக பொருட்செலவில் இன்வெட்டர்கள் வாங்க முடியாத ஏழை மக்கள் இருளை சமாளிக்கவும், குழந்தைகள் படிக்கவும் தற்காலிக ஏற்பாடாக அரிகேன் விளக்கு மற்றும் மெழுகுவர்த்திகளை வாங்கி சமாளித்து வருகின்றனர். இதனால் பரவலாக அரிகேன் விளக்கு மற்றும் மெழுகுவர்த்திக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

கூடன்குளம் தான் ஒரே தீர்வு
இது குறித்து நெல்லையை சேர்ந்த தொழிற்சாலைஉரிமையாளர் ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின் வெட்டால் ஏராளமான தொழிற்சாலைகள் உற்பத்தி பணியை மேற்கொள்ள முடியவில்லை. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும் மின்வெட்டால் மாணவ, மாணவிகள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மின் வெட்டு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண தமிழக அரசு மின் உற்பத்திக்கான புதிய திட்டங்களை செயல்படுத்த முன் வரவேண்டும். மேலும் 99 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் உள்ள கூடன்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியை துவங்குவற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள அறிவிக்கப்படாத மின் வெட்டிற்கு நிரந்தர தீர்வாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக