கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

தமிழகத்தை குட்டி சுவராக்கும் திராவிட கட்சிகள் : பாளை.,யில் இளங்கோவன் "சாடல்'


தமிழகத்தை குட்டி சுவராக்கும் திராவிட கட்சிகள் கூடன்குளம் அணு மின் நிலைய பிரச்னையில் முறைப் பெண்ணை வைத்து ஊர், ஊராக பெண்ணை தேடி அலைவது போல் உள்ளது என்று முன்னாள் தலைவர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறினார்.

பாளையில் நேற்று நடந்த காங்., பொதுக்கூட்டத்தில் இ.வி.கே.எஸ் இளங்கோவன் பேசியதாவது: கூடன்குளம் அணு மின் நிலையம் அவசியம் தேவை என்பது அனைவருக்கும் தெரியும். இப்பிரச்னையில் காங்., கட்சியை தவிர பிற திராவிட கட்சிகள் இப்பிரச்னையை அரசியலாக்கி அரசியல் ஆதாயம் தேட பார்க்கின்றன.

தற்போது நகர்ப்புறங்களில் 8 மணி நேரமும், கிராமப்புறங்களில் 12 மணி நேரமும் மின் வெட்டு உள்ளது. இதனை தீர்க்க ஆளுங்கட்சி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த ஆட்சியில் 2 மணி நேரம் மின் வெட்டு இருந்த போது அதற்கு காரணமானவர்களை குடும்பத்துடன் மக்கள் வீட்டிற்கு அனுப்பினர். ஆனால் தற்போது 8 மணி நேர மின் வெட்டிற்கு காரணமானவர்களை யாருடன் வீட்டிற்கு அனுப்ப போகின்றனர் என்பது தெரியவில்லை. சனிப் பெயர்ச்சி போல் தற்போது பல பெயர்ச்சிகள் நடந்து வருகிறது.

வீட்டில் பல வேலைகளை செய்ய பெண்கள் மறந்து விட்டனர். இலவசம் என்ற பெயரை தவிர்த்து விலையில்லா பொருட்கள் என்று கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். கிரைண்டர், பேன், மிக்சி கொடுக்கும் அரசு கூடவே ஒரு ஜெனரேட்டரும், டீசலும் கொடுத்தால் நன்றாக இருக்கும் என மக்கள் கூறுகின்றனர்.

காஷ்மீரில் அதிக பனி காரணமாக ஏற்பட்ட மின் வெட்டின் காரணமாக தனது வீட்டிற்கு மின்சாரம் தேவையில்லை என்று அங்குள்ள முதல்வர் உமர் அப்துல்லா கூறுகிறார். ஆனால் இங்கு 8 மணி நேரம் மின் வெட்டும் இருந்து இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்காதவர் முதல்வரா என்பதை மக்கள் எண்ணி பார்க்க வேண்டும்.

கூடன்குளம் விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு தலைவர் கூறுகிறார். பல அரசியல் கட்சி தலைவர்களும் இதனை கூறுகின்றனர். மக்களுக்கு காங்., கட்சி மட்டுமே நல்லது செய்து வருகிறது. ஒரு புறம் மின்வெட்டு என்கின்றனர், மறுபுறம் அணு உலைக்கு திராவிட கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது கையில் வெண்ணெயை வைத்து கொண்டு நெய்க்கு அலைவது போல் உள்ளது. முறைப் பெண்ணை வைத்து கொண்டு ஊர் ஊராக பெண் தேடுவது போல் உள்ளது.

தமிழகத்திற்கு ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி அளிக்கப்படும் என்று பிரதமர் உறுதி அளித்துள்ளார். திராவிட இயக்கங்கள் தமிழகத்தை குட்டி சுவராக்கி வருகின்றன. மக்கள் நலனில் இக்கட்சிகளுக்கு எந்தவித அக்கறையும் இல்லை.

எதற்கு எடுத்தாலும் காங்., கட்சியை திட்டுகின்றனர். அவசரப்பட்டு திட்டி, செயல்பட்டு டில்லி திகார் சிறைக்கு சிலர் சென்றுள்ளனர். தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வருக்கு முன்பே மத்திய அமைச்சர் ஜி.கே வாசன் பார்வையிட்டு ஆய்வு செய்து மத்திய அரசு 500 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய உதவியாக இருந்தார். ஆனால் காங்., கட்சியை சிலர் குறை கூறி வருகின்றனர்.

நாட்டிற்கு மின் தேவை அவசியம், தொழில் வளர்ச்சி தேவை என்றும் காங்., குரல் கொடுத்து வருகிறது. ஆனால் இதனை தவறாக புரிந்து கொண்டு சிலர் அரசியல் செய்கின்றனர். நாங்களும் வீதியில் இறங்குவோம். எதற்கும் பயப்பட மாட்டோம். வெள்ளைகாரர்களையே ஒரு கை பார்த்தவர்கள் ஜனநாயகம், நாணயம் கருதி தற்போது அமைதியாக உள்ளோம்.

எங்கள் காதில் யாரும் பூ சுற்றி விட முடியாது. எங்களுக்கும் விஷயங்கள் தெரியும். கூடன்குளம் அணு மின் நிலையத்தை திறக்க ராணுவம் தேவை என்று சிலர் பேசினர். ஆனால் ராணுவம் தேவையில்லை. அணு மின் நிலையத்தை திறக்கிறாயா அல்லது இல்லையா என்ற கேள்வியை மட்டும் கேட்க வேண்டும். இதனை நான் கேட்டால் நன்றாக இருக்காது. கேட்க கூடியவர்கள் கேட்டால் மரியாதை இருக்கும்.

காங்., கட்சியை திட்டினால் நான் அவர்களை சீண்டுவது மட்டுமல்ல அவர்களை ஒழிக்காமல் விட மாட்டேன். இங்கு அனைவரும் சேர்ந்து பொதுக்கூட்டத்தை நடத்துகின்றனர். தலைவர்கள் ஒற்றுமையாக இருப்பது பெரிய விஷயமல்ல. தொண்டர்கள்தான் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

ஏற்ற, இறக்கத்துடன் நான் பேசுவதை சிலர் தவறாக நினைக்கின்றனர். எனது கருத்தைதான் மத்திய அமைச்சர் நாராயணசாமி அமைதியாக கூறுவதை யாரும் தப்பாக நினைக்கவில்லை. காங்., கட்சியின் எண்ணங்களும், உணர்வும் ஒன்றுதான்.இவ்வாறு இளங்கோவன் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக