கடையநல்லூர், செங்கோட்டை நகராட்சி பகுதிகளில் 11 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து நேற்று வழங்கப்பட்டது.
போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் நேற்று மேற்கொள்ளப்பட்டதையடுத்து கடையநல்லூர் நகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 16 முகாம்களிலும் நேற்று காலை முதல் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துகளை வழங்கிய வண்ணம் இருந்தனர்.
இந்நகராட்சியை பொறுத்தவரை 9 ஆயிரத்து 200 குழந்தைகள் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக பட்டியலிடப்பட்ட நிலையில் நேற்று மாலை 5 மணி வரை 8 ஆயிரத்து 769 குழந்தைகளுக்கு மருந்து வழங்கப்பட்டன. நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ராமலிங்கம், சுகாதார அலுவலர் கணேசமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் கைலாசம், பாஸ்கர் மற்றும் சுகாதார பிரிவு பணியாளர்கள், மகப்பேறு பணியாளர்கள் முகாம்களில் சொட்டு மருந்து வழங்குவது குறித்து மேற்பார்வையிட்டனர்.
மேலும் இந்நகராட்சிக்குட்பட்ட பெரியநாயகம் கோயில் பகுதியில் சிவராத்திரியை முன்னிட்டு நேற்று காலை அப்பகுதிக்கு வந்திருந்த பக்தர்களின் குழந்தைகளுக்கும் நகராட்சி சார்பில் போலியோ சொட்டு மருந்து வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டது. கருப்பாநதி அணைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள குடியிருப்பு பகுதி மழைவாழ் மக்கள் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து நகராட்சி சார்பில் வழங்கப்பட்டது.
கடையநல்லூர் யூனியன் பகுதியில் உள்ள சொக்கம்பட்டி, திரிகூடபுரம், காசிதர்மம், நெடுவயல், கொடிக்குறிச்சி, நயினாரகரம், இடைகால், புதுக்குடி, பொய்கை, வேலாயுதபுரம், ஊர்மேலழகியான், கம்பனேரி, போகநல்லூர், குலையநேரி, ஆனைகுளம் ஆகிய பஞ்., பகுதிகளிலும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
* செங்கோட்டை நகராட்சி பகுதியில் நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த 8 சென்டர்களிலும் தாய்மார்கள் தங்களின் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை காலை 8 மணி முதலே அழைத்து வந்து போலியோ சொட்டு மருந்து வழங்கியதை பரவலாக காணமுடிந்தது. செங்கோட்டை நகராட்சியை பொறுத்தவரை போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக 1306 ஆண் குழந்தைகளும், 1291 பெண் குழந்தைகளும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
மேலும் பஸ்ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட முக்கிய பகுதிகளிலும் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கு மொபைல் வசதி மேற்கொள்ளப்பட்டிருந்தது. நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ராமலிங்கம் மற்றும் சுகாதார அலுவலர்கள் இதற்கான பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
செங்கோட்டை யூனியனில் உள்ள புளியரை, தெற்குமேடு, கற்குடி, புதூர், இலத்தூர், சீவநல்லூர், கிளாங்காடு ஆகிய பஞ்., பகுதிகளிலும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அறிவிக்கப்பட்டிருந்த சென்டர்களில் வழங்கப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக