கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 4 பிப்ரவரி, 2012

நாளை மீலாதுநபி ஜெயலலிதா, வைகோ, தலைவர்கள் வாழ்த்து


மீலாது நபி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதல்- அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி வருமாறு:-  

அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த திருநாளாம் மீலாதுன் நபி உலகம் எங்கும் மகிழ்வுடன் கொண்டாடப்படும் இந்த இனிய வேளையில் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நல்வாழ்துக்களை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
 
உலகம் செழிக்கவும், மானுடம் தழைக்கவும், சமுதாயத்தில் சாந்தியும், சமாதானமும், சகோதரத் துவமும் தவழ வேண்டும் என்பது அண்ணல் நபிகளின் அருட்போதனை ஆகும். பெருமானார் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளன்று பெருமானாரின் போதனைப்படி, அன்பு பெருகவும், அமைதி தவழவும், சமரசம் உலவவும், சகோதரத்துவம் தழைக்கவும் அயராது உழைத்திட உறுதி ஏற்போம் எனக் கூறி, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய மீலாதுன் நபி நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை மனமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  
 
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்து:- இறை நம்பிக்கையில் அசைக்க முடியாத உறுதியுடன் உத்தமத் திரு நபிகள் நடத்திய சத்தியப் போராட்டங்கள் அகிலத்திற்கோர் அழகிய முன்மாதிரியாய் அண்ணலை முன் நிறுத்த்தின. நேர்மையுடனும், தூய்மையுடனும் பெருமானார் வாழ்ந்த எளிய வாழ்க்கைக்கு இணை சொல்ல முடியாது.
 
காலம் காலமாகச் சமூக ஒற்றுமையைப் பேணிக்காத்து வரும் தமிழ்ச் சமூகச் சூழலில் சமய நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்த இந்நன்னாளில் சூளூரை மேற்கொள்வோம்.  
 
புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வாழ்த்து:- எளிமையான ஒழுக்கமான வாழ்க்கையை மேற்கொண்டவர் நபிகள் பெருமானார், யாருக்கும், எப்போதும் தீங்கு இழைக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர். இந்த நந்நாளை உலகமெங்கிலும் இஸ்லாமிய பெருமக்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடி மகிழ்கின்றனர். இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் மீலாதுநபி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  
 
தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் வாழ்த்து:- நபிகள் நாயகம் நலிந்த மக்களின் மீட்சிக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த அருளாளர். சாதி, மத, இன வேறுபாடின்றி உலகின் அனைத்து மக்களுக்காகவும் வகுத்தளித்த அவரது அற்புதமான அறநெறிகளை நம் மனதில் ஏற்று அவ்வழி நடப்போம்.
 
இந்நன்னாளில் நாட்டில் மத நல்லிணக்கம், அமைதி, மகிழ்ச்சி எங்கும் சிறந்திட ஒற்றுமை ஒருமைப்பாடு உணர்வுடன் வாழ்ந்து உயர்வோம் என உறுதி ஏற்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக