கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 4 பிப்ரவரி, 2012

தென்காசியை தலையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும்

தென்காசியை தலையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்பட வேண்டும்' என சட்டசபையில் எம்.எல்.ஏ.,சரத்குமார் பேசினார்.தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து தென்காசி எம்.எல்.ஏ.,சரத்குமார் பேசியதாவது:தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முதல்வர் பதவியேற்ற 8 மாத காலத்தில் கடந்த ஆட்சியில் நடந்த அவலங்களையெல்லாம் தீர்த்து வைத்து, அந்த சுமைகளையெல்லாம் தன் மீது சுமந்து கொண்டு பல நல்ல திட்டங்களையும் மற்றும் வளர்ச்சி திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்திய பெருமை அவருக்கு உண்டு என்றால் அது மிகையல்ல. ஒட்டு மொத்தமாக தமிழக மக்கள் முதல்வர் மீது நம்பிக்கை வைத்து அவரை வெற்றி பெறச் செய்துள்ளனர். அவர்கள் தனித்து நின்றிருந்தால் கூட அவர்கள் வெற்றி பெற்றிருக்க முடியும்.

தென்காசியை தலைமையிடமாக கொண்டு தென்காசி மாவட்டம் என அமைக்க வேண்டுகிறேன். குற்றாலம் டவுன் பஞ்., வளர்ச்சிக்கான சிறப்பு திட்டங்களை அரசு அமல்படுத்தி ஆண்டு முழுவதும் மக்கள் வருகை தரும் வகையில் அதனை சுற்றுலா ஸ்தலமாக மாற்றிட வேண்டும். அங்கு பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்திட வேண்டும். தென்காசியில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலத்தின் மத்திய பகுதியை ரயில்வே நிர்வாகம் விரைந்து கட்டாமல் காலம் கடத்தி வருகிறது. உடனடியாக அப்பகுதியை கட்டி முடித்திட மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும்.

தென்காசி தொகுதியில் தென்காசி, வீரகேரளம்புதூர் வட்டங்களில் தென்காசியில் மட்டும் கால்நடை ஆஸ்பத்திரி உள்ளது. வீரகேரளம்புதூர் வட்டத்தில் கால்நடை ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும். கடந்த 2011-12ம் ஆண்டு கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்ட கால்நடை மருத்துவ கல்லூரியை நெல்லை மாவட்டம் ஊத்துமலையில் அமைத்திட வேண்டும். வீரகேரளம்புதூர் வட்டத்தில் உள்ள ஆலங்குளம் யூனியன் பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. இதனை போக்க சிறப்பான குடிநீர் திட்டத்தினை செயல்படுத்திட வேண்டும்.

வீரகேரளம்புதூர் வட்டத்திலுள்ள அனைத்து சாலைகளும் பழுதடைந்த நிலையில், இடையில் பாலங்கள் இல்லாமல் உள்ளன. இதற்கான சிறப்பு திட்டம் தீட்டி செயல்படுத்திட வேண்டும். பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் விளையும் காய்கறிகள் மற்றும் பூக்களை பாதுகாத்திட குளிர்சாதன வசதியுள்ள கிடங்குகள் கட்ட வேண்டும். தென்காசி தொகுதியில் விவசாயிகளிடம் நெல்லை அரசே கொள்முதல் செய்திட வழியில்லாமல் சிரமமாக உள்ளது. எனவே சுந்தரபாண்டியபுரம், வீரகேரளம்புதூர் இடங்களில் இந்த ஆண்டே கொள்முதல் நிலையங்கள் அமைத்திட அரசு ஆணையிட வேண்டும்.

ஊத்துமலையை சுற்றியுள்ள கிராமங்களில் புஞ்சை நிலங்கள் அதிகம் உள்ளதால் விவசாயிகள் பயன்பெற ஆடு வளர்ப்புக்கு அரசு உதவிடவும், ஆடு வளர்ப்பு சங்கம் அமைத்து கடன் வழங்கிடவும் வேண்டும். தென்காசி நகருக்கு புறவழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தல் போன்ற பூர்வாங்க பணிக்காக 9.07 கோடி ரூபாயை ஒதுக்கி முதல்வர் ஆணையிட்டுள்ளார். அதற்காக முதல்வருக்கு தொகுதி மக்கள் சார்பாக நன்றியை தெரிவிப்பதோடு, இந்த புறவழிச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

குற்றாலம் டவுன் பஞ்.,சில் ஐந்தருவி பழத்தோட்ட அருவி பகுதியில் தோட்டக்கலை சார்பில் அமைக்கப்பட்டு வரும் பூங்காவை விரைவுபடுத்தி முடிக்க வேண்டும். குற்றாலத்தில் ஒரு கொள்கை விளக்க பூங்கா (தீம்பார்க்) அமைக்க வேண்டும். தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தென்காசி பகுதியில் விவசாயிகளுக்கு விதை சேமிப்பு கிடங்கு கட்ட 25 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக மேலகரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் தாழ்வாக உள்ளதாகவும் அதனால் இப்பகுதியில் இந்த பணியை மேற்கொள்ள இயலாது எனவும் பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. எனவே வேளாண்மைத் துறைக்கு சொந்தமான வேறு இடத்தை உடனடியாக தேர்வு செய்து விதை சேமிப்பு கிட்டங்கி கட்ட வேண்டும்.

தென்காசியிலுள்ள பட்டுக்கூடு அங்காடியை மேம்படுத்த வேண்டும். தென்காசி நகராட்சியில் மேலும் ஒரு போலீஸ் ஸ்டேஷன் ஏற்படுத்த வேண்டும். குற்றாலத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் அலுவலகம் திறக்கப்பட வேண்டும். குற்றாலத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சாரல் விழாவில் திருக்குற்றால குறவஞ்சி பாடிய திரிகூட ராசப்ப கவிராயருக்கு விழா எடுக்க வேண்டும். குற்றாலம் சுற்றுச்சூழல் சுற்றுலா பகுதியாக மேம்படுத்தப்பட வேண்டும். குற்றாலத்தில் தண்ணீர் விளையாட்டு பொழுதுபோக்கு பூங்கா அமைக்க வேண்டும்.

தென்காசியில் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் அமைக்க வேண்டும். பாவூர்சத்திரம் பஸ்ஸ்டாண்ட் காமராஜர் சிலை அருகில் சுமார் 2 கி.மீ. நீளத்திற்கு சாலையை மேம்படுத்த நெடுஞ்சாலைத்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். காமராஜர் சிலை அருகில் வாறுகால் அமைக்க வேண்டும். இவ்வாறு எம்.எல்.ஏ.,சரத்குமார் சட்டசபையில் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக