கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந்தேதி, குஜராத் மாநிலம் கோத்ராவில், சாதுக்கள் சென்ற ரெயில் பெட்டி தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் அந்த பெட்டியில் பயணம் செய்த சாமியார்கள் அனைவரும் கருகி பலியானார்கள். இதையடுத்து, கலவரம் மூண்டது. மாநிலம் முழுவதும் இரு சமூகத்தினரிடையே பயங்கர மோதல் நடந்தது. இந்த சம்பவத்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
இந்த கலவரம் தொடர்பாக மாநில உயர் போலீஸ் குழு, சி.பி.ஐ., சுப்ரீம் கோர்ட்டினால் நியமிக்கப்பட்ட குழு ஆகியவை விசாரணை நடத்தின. குல்பர்க் ஹவுசிங் சொசைட்டி படுகொலை உள்ளிட்ட, 10 கலவர வழக்குகளை விசாரிக்க, கடந்த 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் சுப்ரீம் கோர்ட்டு சிறப்பு விசாரணை குழு (எஸ்.ஐ.டி.) ஒன்றை அமைத்தது. இந்தக்குழு முதல்-மந்திரி நரேந்திரமோடியிடமும் விசாரணை நடத்தியது.
சிறப்பு விசாரணை குழுவின் அதிகாரி ஏ.கே. மல்கோத்ரா எழுப்பிய 71 கேள்விகளுக்கும், நரேந்திரமோடி விளக்கமாக பதில் அளித்தார். இம்மாதம்
14-ந்தேதி சிறப்பு புலனாய்வு குழு, விசாரணை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதில், கலவரத்தில் நரேந்திர மோடிக்கு தொடர்பில்லை, அவர் குற்றமற்றவர் என்று கூறப்பட்டுள்ளதாக, செய்திகள் வெளியாகின.
இப்போது, சிறப்பு விசாரணைக்குழு அறிக்கையின் ஒரு பகுதி, அதிகாரப் பூர்வமற்ற வகையில் வெளியாகி இருக்கிறது. அதாவது, நரேந்திரமோடியின் வாக்கு மூலம் வெளியே கசிந்துள்ளது. நரேந்திரமோடி, 2010 மார்ச் 27, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு புலனாய்வுக்குழு முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார். அதன் விபரம் வருமாறு:-
குஜராத்தில் 2002-ம் ஆண்டில் மட்டுமே மதக்கலவரம் நடக்கவில்லை. குஜராத்துக்கு மதக்கலவரம் புதிதும் அல்ல. நான் பிறப்பதற்கு முன்பே, குஜராத்தில் பல முறை மதக்கலவரங்கள் நடைபெற்றுள்ளன. கி.பி. 1714-ம் வருடத்தில் இருந்து வரலாற்றை புரட்டிப் பார்த்தால், குஜராத்தில் ஆயிரக்கணக்கான மதக்கலவரங்கள் நடந்திருப்பது பதிவாகி இருக்கும்.
கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் நடந்த உடன், எனது இல்லத்தில் உயர் போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னாள் துணை கமிஷனரான (புலனாய்வு) சஞ்சீவ்பட் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஏனெனில் நடந்தது உயர்மட்டக்குழு கூட்டம் என்பதால், ஜூனியர் அதிகாரியான சஞ்சீவ்பட் அழைக்கப்படவில்லை.
இவ்வாறு நரேந்திரமோடி வாக்குமூலம் அளித்துள்ளார்.
நரேந்திரமோடி கூட்டிய போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில், தானும் கலந்து கொண்டதாகவும், கலவரத்தை தடுக்க வேண்டாம் என்று போலீஸ் அதிகாரிகளை மோடி கேட்டுக் கொண்டதாகவும், சஞ்சீவ் பட் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக