கடையநல்லூரில் அனுமதிக்கப்பட்ட வாட்டர் டேங்க் அமைத்திட வேண்டுமென நான்கு வார்டு பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டதை அடுத்து சுமார் 2 மணி நேரம் பரபரப்பான நிலை காணப்பட்டது.கடையநல்லூர் நகராட்சியில் சுமார் 22 கோடி ரூபாய் செலவில் குடிநீர் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த புதிய திட்டத்தின் அடிப்படையில் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள மேலக்கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால், பேட்டை, குமந்தாபுரம் உள்ளிட்ட 7 பகுதிகளில் புதிதாக வாட்டர் டேங்குகள் அமைத்திட திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அதனை தொடர்ந்து தற்போது வாட்டர் டேங்குகள் கட்டப்பட்டு வருகின்றன.
அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் சீராக கிடைப்பதன் அவசியத்தை கருத்திற்கொண்டு வாட்டர் டேங்குகள் கட்டப்பட்டு வரும் நிலையில் 6, 7,8,9 ஆகிய நான்கு வார்டுகளை சேர்ந்த பொதுமக்களின் வசதிக்காக 5வது வார்டில் வாட்டர் டேங்க் கட்ட தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அப்பகுதியில் வாட்டர் டேங்குகள் கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்ற ஆதங்கமும், அதிருப்தியும் நான்கு வார்டு பொதுமக்கள் மத்தியில் காணப்பட்டு வருகிறது.மேலும் ஆகஸ்ட் மாதத்திற்குள் வாட்டர் டேங்க் குறிப்பிட்ட பகுதியில் கட்டப்படாவிட்டால் அதற்கான நிதி ஒதுக்கீடு திருப்பி செல்வதற்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டு வரும் நிலையில் நான்கு வார்டுகளை சேர்ந்த சமுதாய தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த 12ம் தேதி கலந்தாலோசனை நடத்தியதன் அடிப்படையில் இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் முறையீடு செய்ய தீர்மானித்தனர்.இதன்படி நேற்று காலை முத்துகிருஷ்ணாபுரத்திலிருந்து 6,7,8,9 வார்டுகளை சேர்ந்த சமுதாய தலைவர்கள், நாட்டாண்மைகள், பெரியவர்கள், வார்டு கவுன்சிலர்கள் சீதாலட்சுமி, மாரிமுத்து, பூமாரியம்மாள், முத்துக்குமார் மற்றும் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர். சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகத்திற்கு வந்ததை அடுத்து அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.நான்கு வார்டு மக்களின் குடிநீர் தேவையை கருத்திற்கொண்டு தாமதமின்றி புதிய குடிநீர் திட்டத்தினாலான வாட்டர் டேங்க் கட்டுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென நகராட்சி தலைவி சைபுன்னிஷா மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். இது தொடர்பாக தாமதமின்றி நடவடிக்கை எடுக்கப்படுமென பொதுமக்களிடம் உறுதியளித்தனர். இதனை அடுத்து நகராட்சி அலுவலகத்தில் சுமார் இரண்டு மணிநேரம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.முற்றுகை போராட்டத்தை அடுத்து கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக