கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

திங்கள், 27 பிப்ரவரி, 2012

ஆலங்குளம் அருகே மினி லாரி-கார் நேருக்கு நேர் மோதல்: உடல் நசுங்கி 8 பேர் பலி

ஆலங்குளம் அருகே கார், மினி லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் உடல் நசுங்கி 8 பேர் பரிதாபமாக பலியாயினர்.

இந்த கோர விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

நெல்லை மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்தவர், காளிமுத்து (வயது 43). நடுநிலைப்பள்ளி ஆசிரியர். அவருடைய மனைவி ஜெயக்குமாரி (38). புளியங்குடியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். அவர்களுடைய மகள் காயத்ரி (13). மகன் ஹரீஷ் (8.)

ஆசிரியை ஜெயக்குமாரி அண்ணன் கோபியின் வீடு நெல்லை டவுன் காட்சி மண்டபம் பகுதியில் உள்ளது. கோபி சித்தா டாக்டர் ஆவார். அவருடைய மனைவிக்கு வளைகாப்பு விழா நேற்று நெல்லையில் நடந்தது. தன்னுடைய அண்ணன் மனைவிக்கு வளைகாப்பு என்பதால் ஜெயக்குமாரியும், அவருடைய குடும்பத்தினர் அனைவரும் நேற்று முன்தினமே நெல்லை வந்தனர்.

தென்காசியை அடுத்த மேலகரத்தில் உள்ள `ஸ்டேட்' வங்கி காலனியைச் சேர்ந்த அம்மையப்பன் (53) என்பவரது குடும்பத்தினரும் வளைகாப்பு விழாவுக்கு வந்து இருந்தனர். அம்மையப்பன் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். தென்காசியில் ஒரு வாடகை காரை அமர்த்தி அம்மையப்பன் குடும்பத்தினர் வந்து இருந்தனர். நேற்று காலையில் வளைகாப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.

விழா முடிந்ததும் உறவினர்கள் அனைவரும் மதிய விருந்து சாப்பிட்டனர். பிறகு ஆசிரியை ஜெயக்குமாரி குடும்பத்தினர் அங்கு இருந்து ஊருக்கு புறப்பட தயாரானார்கள். அப்போது தான் அம்மையப்பன் குடும்பத்தினர் விழாவுக்கு காரில் வந்து இருப்பதை அறிந்தனர். எனவே அவர்களுடன் சேர்ந்து காரில் தென்காசி வரை சென்று விடலாம் என்று நினைத்து அம்மையப்பனிடம், ஜெயக்குமாரி கேட்டுள்ளார்.

அதற்கு அவர், "டிரைவருடன் சேர்த்து நாங்கள் 5 பேர் உள்ளோம். எல்லோரும் சமாளித்துக் கொண்டால் தென்காசி வரை சென்று விடலாம்'' என்று கூறினார்.

இதனால் ஜெயக்குமாரி, அவருடைய கணவர் காளிமுத்து மற்றும் மகன், மகள் ஆகியோர் காரில் ஏறிக் கொண்டனர். தென்காசியை சேர்ந்த பாலா (22) என்பவர் காரை ஓட்டிச் சென்றார். தென்காசி மெயின் ரோட்டில் சீதபற்பநல்லூர், மாறாந்தையை கடந்து ஆலங்குளத்தை கார் நெருங்கிக் கொண்டு இருந்தது. ஆலடிப்பட்டி விலக்கை தாண்டி ஒரு திருப்பத்தில் கார் வேகமாக திரும்பியது. அப்போது எதிரே லாரி வந்து கொண்டு இருந்தது.

கண் இமைக்கும் நேரத்தில் லாரியும், காரும் பயங்கர சத்தத்துடன் மோதிக் கொண்டன. இதனால் கார் உருக்குலைந்து நொறுங்கியது. மோதிய வேகத்தில் மேற்கு நோக்கிச் சென்ற அந்த கார் கிழக்கு நோக்கி திரும்பி நின்றது. லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமிருந்த வயலுக்குள் பாய்ந்தது.

அடையாளம் காண முடியாத அளவுக்கு காரின் முன்பகுதி நொறுங்கி கிடந்தது. விபத்து நடந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர், வயலில் வேலை செய்து கொண்டு இருந்தவர்கள் அங்கு ஓடிவந்தனர்.

ஆலங்குளம் போலீசாரும் தகவல் அறிந்து விரைந்து வந்தனர். காரில் இருந்த சிலர் தங்களை காப்பாற்றும்படி கூக்குரலிட்டனர். போலீசாரும், பொதுமக்களும் சேர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காரின் முன்பகுதி வழியாக விபத்தில் சிக்கிய யாரையும் மீட்க முடியவில்லை. எனவே காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்து அதன் வழியே போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த ஆசிரியர் காளிமுத்து உடனடியாக மீட்கப்பட்டார். அவருடைய மகன் ஹரீசும் உடனடியாக மீட்கப்பட்டான். காரில் இருந்த மற்ற 7 பேரையும் பிணங்களாகவே மீட்க முடிந்தது. அவர்களின் உடல்கள் காரின் உள்ளேயே மிகவும் மோசமான நிலையில் சிதைந்து இருந்தன. கார் முழுவதும் ரத்தம் கொட்டி கிடந்தது. சில உடல்களில் கை, கால்கள் சிதைந்து இருந்தன.

விபத்தில் பலியானவர்கள் விவரம் வருமாறு:-

1. ஆசிரியை ஜெயக்குமாரி

2. ஜெயக்குமாரி மகள் காயத்ரி

3. முன்னாள் ராணுவ வீரர் அம்மையப்பன்

4. அம்மையப்பன் மகள் செல்வி (24)

5. அம்மையப்பன் மகன் கவுதம் (6)

6. அம்மையப்பன் மாமியார் ஆறுமுக களஞ்சியம்மாள் (65)

7. கார் டிரைவர் பாலா

படுகாயம் அடைந்த காளிமுத்துவும், அவருடைய மகன் ஹரீசும் ஆம்புலன்ஸ் வேன் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதே போல் படுகாயம் அடைந்த லாரி டிரைவர் வேல்முருகனும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சிறுவன் ஹரீசும் பரிதாபமாக இறந்தான்.

அவனையும் சேர்த்து விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. காளிமுத்துவுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உறவினர்கள் பலியான இடத்திலேயே...

கடந்த 2000ம் ஆண்டு பங்குனிஉத்திரத்தையொட்டி வேனில் கோயிலுக்கு சென்ற அம்மையப்பனின் உறவினர்கள் 17 பேர் ஆலங்குளம் தொட்டியான்குளம் வளைவு பகுதியில் பஸ் மோதி பலியாயினர். அதே இடத்தில் நேற்று நடந்த விபத்தில் அம்மையப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் பலியாகி விட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக