கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் உடனே வாட்டர் டேங்க் அமைக்க வேண்டும்


கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் வாட்டர் டேங்க் அமைத்திட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென 4 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துரையாடலில் நகராட்சி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் சுமார் 22 கோடி ரூபாய் செலவில் குடிநீர் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் சீராக கிடைத்திடும் வகையில் நகராட்சி பகுதியில் மேலக்கடையநல்லூர், மாவடிக்கால், முத்துகிருஷ்ணாபுரம், பேட்டை, குமந்தாபுரம் உள்ளிட்ட 7 இடங்களில் புதிய வாட்டர் டேங்குகள் அமைத்திட தெரிவிக்கப்பட்டு அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையில் நகராட்சியில் அமைந்துள்ள 6,7,8,9 ஆகிய நான்கு வார்டுகளை சேர்ந்த பொதுமக்களுக்கு புதிய குடிநீர் திட்டத்தின் அடிப்படையில் வாட்டர் டேங்குகள் அமைக்கும் பணியில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட காலத்திற்குள் வாட்டர் டேங்குகள் இப்பகுதியில் அமைக்கப்படாவிட்டால் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் அதற்கான திட்ட அனுமதி திரும்ப பெறப்படுமென கூறப்பட்டு வருகிறது.

இதனையடுத்து இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இது தொடர்பான கலந்துரையாடல் நடத்தினர். முத்துகிருஷ்ணாபுரம் சேனைத்தலைவர் சமுதாய மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு சேனை தலைவர் சமுதாய தலைவர் சண்முகவேலு தலைமை வகித்தார். வார்டு கவுன்சிலர்கள் சீதாலெட்சுமி, மாரிமுத்து, பூமாரியம்மாள், முத்துக்குமார் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் முத்துகிருஷ்ணாபுரம் வாணியர் சமுதாய தலைவர் வேலு, யாதவ் சமுதாய தலைவர் நாட்டாண்மை சுப்புயாதவ், விஸ்வகர்ம சமுதாய தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வன்னியர் சமுதாய தலைவர் முருகன், கடையநல்லூர் வாணியர் சமுதாய தலைவர் பட்டமுத்து, மஞ்சனை கோனார் சமுதாய தலைவர் சுப்பு மற்றும் அப்பகுதியை சேர்ந்த சமுதாய நிர்வாகிகள், பெரியோர்கள், பொது நல அமைப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கடையநல்லூர் நகராட்சியில் அமைந்துள்ள 6,7,8,9 ஆகிய வார்டு மக்களின் நலனுக்காக புதிய குடிநீர் திட்டத்தின் அடிப்படையின் கீழ் கட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள வாட்டர் டேங்கினை காலதாமதம் இன்றி உடனடியாக கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகமும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறையும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக நாளை (15ம் தேதி) காலை 10 மணிக்கு நகராட்சி ஆணையரை சந்தித்து பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக