கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 16 பிப்ரவரி, 2012

28ம் தேதி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் திமுக ஆதரவு

தொழிற்சங்கங்கள் சார்பில் வரும் 28ம் தேதி நடைபெற உள்ள நாடு தழுவிய பொது வேலைநிறுத்த போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என திருப்பூர் மாவட்ட தொமுச கோரிக்கை விடுத்துள்ளது. இந்த போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது

திருப்பூர் மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்க இணைப்பு சங்க நிர்வாகிகள் கூட்டம் குமரன் ரோடு தொமுச அலுவலகத்தில் நடைபெற்றுது. இந்த கூட்டத்திற்கு பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் அதிமுக தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் நான்கே மாதங்களில் மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு காண்போம் என உறுதியளித்தது. ஆனால் தற்போது 7 மாதம் ஆகியும் மின் வெட்டை சரிசெய்யவில்லை. மாறாக தினசரி சுமார் 10 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது.

இதனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன், பஞ்சாலை, விசைத்தறி, விவசாயம், அதை ஒட்டியுள்ள குறு, சிறு உப தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே,தமிழக அரசு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், முன்பேர வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும், பொது வினியோகத்தை பலப்படுத்த வேண்டும், தொழிலாளர், தொழில் தகராறு சட்டங்களை கடுமையாக அமல்படுத்த வேண்டும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு முழுமையான சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் மத்திய அரசு எந்த கோரிக்கையையும் நிறைவேற்றாததால் வரும் 28ம் தேதி பொது வேலைநிறுத்தம் நடைபெறும். இந்த போராட்டத்தில் தொழிலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு வெற்றி பெற வைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக