கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

புதன், 29 பிப்ரவரி, 2012

கடையநல்லுரை சார்ந்த வாலிபர் சேப்பிள்ளை அன்வர் திருச்சியில் மரணம்

கடையநல்லுரை சார்ந்த வாலிபர் திருச்சியில் மரணம்


கடையநல்லூர் கல்வத் நாயகம் தெருவில் சேப்பிள்ளை குடும்பத்தை சார்ந்த காஜா மைதீன் என்பவர் திருச்சியில் கம்போண்டராக வெளிசெய்து வருகிறார்  அவர்களுடைய மகன் அன்வர் திருச்சியில் நேற்று இரவு டூ வீலரில் நண்பர்  இந்தி பாசித் என்பவருடன் பாஸ்போர்ட் ஆபீஸ் சென்று கொண்டிருக்கும் போது எதிர் பாராதவிதமாக எதிரே வந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது இந்தி பாசித் என்பவர் காயத்துடன் உயிர் தப்பினார் சம்பவ இடத்திலேயே அன்வர் அகால மரணம் அடைந்தார் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இவர் சமீபத்தில் சவூதி அரேபியாவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது 




அன்னாரின் குடும்பத்தார்க்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். 

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

கடையநல்லூரில் நோய் தாக்கிய இறைச்சிகளை விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும்' இந்து முன்னணி


"கடையநல்லூர் நகராட்சி பகுதியில் நோய் தாக்கிய ஆடு, மாடு, கோழி இறைச்சிகளை விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும்' இந்து முன்னணி சார்பில் நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது.

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் ஏற்கனவே இறந்து போன ஆட்டினை எடுத்து வந்து விற்பனை செய்வதற்காக கொண்டு வந்த சம்பவம் நகராட்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் இறந்துபோன ஆடு, மாடு, கோழி போன்றவற்றினை விற்பனை செய்வதற்கு தடை விதித்தது. இது தொடர்பான நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்திய நிலையில் சில பகுதிகளில் நோய்கள் தாக்கிய ஆடு, மாடு, கோழி இறைச்சிகளை விற்பனை செய்து வருவதாக தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகிறது.

இதுகுறித்து நெல்லை மேற்கு மாவட்ட இந்து முன்னணி செயலாளர் சிவா நகராட்சி நிர்வாகத்திற்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

நகராட்சி பகுதிகளில் நோய் தாக்கிய கோழி, ஆடு மற்றும் மாடுகளை இறைச்சியாக விற்பதால் நோய்பரவும் அபாயம் காணப்பட்டுள்ளது. இதில் உள்ள கழிவுகளை ஆற்றில் கொட்டுவதால் நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட மக்களை பாதிக்கும் மர்ம காய்ச்சல் பரவும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

எனவே நகராட்சி பகுதியில் நோய் தாக்கிய ஆடு, மாடு, கோழி போன்ற இறைச்சிகள் விற்பனை செய்வதை கண்டறிந்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவும், கழிவுகளை ஆற்றுப்படுகை மற்றும் கால்வாய்களிலும் கொட்டுவதற்கும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

வரதட்சணை இன்றி திருமணம் செய்ய முஸ்லிம் இளைஞர்கள் முன்வரவேண்டும் TNTJ

வரதட்சணை இன்றி திருமணம் செய்ய முஸ்லிம் இளைஞர்கள் முன்வர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியது. பாளை. யில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகரக்கிளை சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. நகர தலைவர் நவாஸ் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் கோவை ரகுமத்துல்லா பேசினார்.

நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரைப்படி முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்குவது, தமிழகத்தில் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்துவது, இக்கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டால் சென்னையில் போராட்டம் நடத்துவது, மின்வெட்டை குறைப்பது, சங்கரன்கோவில் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நிவாரண உதவி வழங்க அரசை வலியுறுத்துவது, வரதட்சணை இன்றி திருமணம் செய்ய முஸ்லிம் இளைஞர்கள் முன்வர வலியுறுத்துவது, வரதட்சணை இல்லாத திருமணத்தை மட்டும் நடத்த ஜமாத்தார்களை வலியுறுத்துவது, பள்ளி, கல்லூரிகள் அருகே ஒட்டப்படும் சினிமா, ஆபாச போஸ்டர்களை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பீர் பாட்டில் வெடித்ததில் 15 வயது சிறுவன் பலி

திருவாரூர் மாவட்டம் தியானபுரம் பகுதியில் பீர் பாட்டில் வெடித்ததில், அதை இடுப்பில் வைத்துக் கொண்டு சைக்கிளில் வந்த 15 வயது சிறுவன் பரிதாபமாக பலியாகியுள்ளான்.

திருவாரூர் மாவட்டம் தியானபுரம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவருடைய மகன் கவுசிகன் (15). 9-ம் வகுப்பு படித்து வந்தான் கவுசிகன். நேற்று இரவு கவுசிகன் அங்குள்ள ஒரு டாஸ்மாக் மதுபானக்கடையில் பீர் வாங்கியுள்ளான்.

பின்னர் பீர் பாட்டிலை தனது இடுப்பில் பேண்ட் இடுக்கில் சொருகி வைத்துக் கொண்டு சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தான். மேம்பலம் என்ற இடம் அருகே கவுசிகன் வந்த போது அதிக அழுத்தம் மற்றும் உராய்வின் காரணமாக பீர்பாட்டில் திடீரென்று வெடித்து சிதறியது.

இதனால் அவனது அடிவயிற்றில் பாட்டில் கண்ணாடி குத்தி ரத்தப்பெருக்கு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே கவுசிகன் மயங்கி விழுந்தான். அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் உயிரிழந்தான்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் யாருக்காக பீர் பாட்டிலை வாங்கிச் சென்றான், அதில் பீர்தான் இருந்ததா அல்லது வேறு ஏதேனும் இருந்ததா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.




திங்கள், 27 பிப்ரவரி, 2012

ஆலங்குளம் அருகே மினி லாரி-கார் நேருக்கு நேர் மோதல்: உடல் நசுங்கி 8 பேர் பலி

ஆலங்குளம் அருகே கார், மினி லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் உடல் நசுங்கி 8 பேர் பரிதாபமாக பலியாயினர்.

இந்த கோர விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

நெல்லை மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்தவர், காளிமுத்து (வயது 43). நடுநிலைப்பள்ளி ஆசிரியர். அவருடைய மனைவி ஜெயக்குமாரி (38). புளியங்குடியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். அவர்களுடைய மகள் காயத்ரி (13). மகன் ஹரீஷ் (8.)

ஆசிரியை ஜெயக்குமாரி அண்ணன் கோபியின் வீடு நெல்லை டவுன் காட்சி மண்டபம் பகுதியில் உள்ளது. கோபி சித்தா டாக்டர் ஆவார். அவருடைய மனைவிக்கு வளைகாப்பு விழா நேற்று நெல்லையில் நடந்தது. தன்னுடைய அண்ணன் மனைவிக்கு வளைகாப்பு என்பதால் ஜெயக்குமாரியும், அவருடைய குடும்பத்தினர் அனைவரும் நேற்று முன்தினமே நெல்லை வந்தனர்.

தென்காசியை அடுத்த மேலகரத்தில் உள்ள `ஸ்டேட்' வங்கி காலனியைச் சேர்ந்த அம்மையப்பன் (53) என்பவரது குடும்பத்தினரும் வளைகாப்பு விழாவுக்கு வந்து இருந்தனர். அம்மையப்பன் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். தென்காசியில் ஒரு வாடகை காரை அமர்த்தி அம்மையப்பன் குடும்பத்தினர் வந்து இருந்தனர். நேற்று காலையில் வளைகாப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.

விழா முடிந்ததும் உறவினர்கள் அனைவரும் மதிய விருந்து சாப்பிட்டனர். பிறகு ஆசிரியை ஜெயக்குமாரி குடும்பத்தினர் அங்கு இருந்து ஊருக்கு புறப்பட தயாரானார்கள். அப்போது தான் அம்மையப்பன் குடும்பத்தினர் விழாவுக்கு காரில் வந்து இருப்பதை அறிந்தனர். எனவே அவர்களுடன் சேர்ந்து காரில் தென்காசி வரை சென்று விடலாம் என்று நினைத்து அம்மையப்பனிடம், ஜெயக்குமாரி கேட்டுள்ளார்.

அதற்கு அவர், "டிரைவருடன் சேர்த்து நாங்கள் 5 பேர் உள்ளோம். எல்லோரும் சமாளித்துக் கொண்டால் தென்காசி வரை சென்று விடலாம்'' என்று கூறினார்.

இதனால் ஜெயக்குமாரி, அவருடைய கணவர் காளிமுத்து மற்றும் மகன், மகள் ஆகியோர் காரில் ஏறிக் கொண்டனர். தென்காசியை சேர்ந்த பாலா (22) என்பவர் காரை ஓட்டிச் சென்றார். தென்காசி மெயின் ரோட்டில் சீதபற்பநல்லூர், மாறாந்தையை கடந்து ஆலங்குளத்தை கார் நெருங்கிக் கொண்டு இருந்தது. ஆலடிப்பட்டி விலக்கை தாண்டி ஒரு திருப்பத்தில் கார் வேகமாக திரும்பியது. அப்போது எதிரே லாரி வந்து கொண்டு இருந்தது.

கண் இமைக்கும் நேரத்தில் லாரியும், காரும் பயங்கர சத்தத்துடன் மோதிக் கொண்டன. இதனால் கார் உருக்குலைந்து நொறுங்கியது. மோதிய வேகத்தில் மேற்கு நோக்கிச் சென்ற அந்த கார் கிழக்கு நோக்கி திரும்பி நின்றது. லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமிருந்த வயலுக்குள் பாய்ந்தது.

அடையாளம் காண முடியாத அளவுக்கு காரின் முன்பகுதி நொறுங்கி கிடந்தது. விபத்து நடந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர், வயலில் வேலை செய்து கொண்டு இருந்தவர்கள் அங்கு ஓடிவந்தனர்.

ஆலங்குளம் போலீசாரும் தகவல் அறிந்து விரைந்து வந்தனர். காரில் இருந்த சிலர் தங்களை காப்பாற்றும்படி கூக்குரலிட்டனர். போலீசாரும், பொதுமக்களும் சேர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காரின் முன்பகுதி வழியாக விபத்தில் சிக்கிய யாரையும் மீட்க முடியவில்லை. எனவே காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்து அதன் வழியே போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த ஆசிரியர் காளிமுத்து உடனடியாக மீட்கப்பட்டார். அவருடைய மகன் ஹரீசும் உடனடியாக மீட்கப்பட்டான். காரில் இருந்த மற்ற 7 பேரையும் பிணங்களாகவே மீட்க முடிந்தது. அவர்களின் உடல்கள் காரின் உள்ளேயே மிகவும் மோசமான நிலையில் சிதைந்து இருந்தன. கார் முழுவதும் ரத்தம் கொட்டி கிடந்தது. சில உடல்களில் கை, கால்கள் சிதைந்து இருந்தன.

விபத்தில் பலியானவர்கள் விவரம் வருமாறு:-

1. ஆசிரியை ஜெயக்குமாரி

2. ஜெயக்குமாரி மகள் காயத்ரி

3. முன்னாள் ராணுவ வீரர் அம்மையப்பன்

4. அம்மையப்பன் மகள் செல்வி (24)

5. அம்மையப்பன் மகன் கவுதம் (6)

6. அம்மையப்பன் மாமியார் ஆறுமுக களஞ்சியம்மாள் (65)

7. கார் டிரைவர் பாலா

படுகாயம் அடைந்த காளிமுத்துவும், அவருடைய மகன் ஹரீசும் ஆம்புலன்ஸ் வேன் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதே போல் படுகாயம் அடைந்த லாரி டிரைவர் வேல்முருகனும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சிறுவன் ஹரீசும் பரிதாபமாக இறந்தான்.

அவனையும் சேர்த்து விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. காளிமுத்துவுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உறவினர்கள் பலியான இடத்திலேயே...

கடந்த 2000ம் ஆண்டு பங்குனிஉத்திரத்தையொட்டி வேனில் கோயிலுக்கு சென்ற அம்மையப்பனின் உறவினர்கள் 17 பேர் ஆலங்குளம் தொட்டியான்குளம் வளைவு பகுதியில் பஸ் மோதி பலியாயினர். அதே இடத்தில் நேற்று நடந்த விபத்தில் அம்மையப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் பலியாகி விட்டனர்.

பாங்க்., ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் நாளை ( 28 ம் தேதி) மெகா ஸ்டிரைக்


இந்த மாத இறுதிக்கணக்கு வெகுவாக பாதிக்கும் வகையில் பாங்க்., ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் நாளை ( 28 ம் தேதி) மெகா ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர். இதனால் மாத இறுதி நாளில் பணப்பட்டுவாடா பல வழிகளில் பாதித்து ஒரு நாள் , இரண்டு நாள் என கால தாமதம் ஏற்பட வேண்டியிருக்கும். ( இந்த மாதம் 29ம் தேதியுடன் முடிவடைகிறது என்பது நினைவு கூறத்தக்கது ) 

காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் தொழிலாளர் கொள்கை விரோத போக்கை கண்டித்தும், விலைவாசி உயர்வு , அன்னிய முதலீடு, பொது நிறுவன பணிகளை அவுட்சோர்சிங் கொடுப்பது , வாராக்கடனை திரும்ப பெறுதலில் உள்ள சுணக்கம் பணவீக்கம் கட்டுபடுத்தாமை, கான்ட்ராக்ட் அடிப்படையில் நியமனம் கூடாது. குறைந்பட்ச கூலி சட்ட திருத்தம், அனைத்து ஊழியர்களுக்கும் பென்சன், உள்ளிட்ட விஷயங்களை வலியுறுத்தி இந்த போராட்டம் 

நடக்கிறது. நாட்டில் உள்ள 11 மத்திய தொழிலாளர் சங்கங்கள், சுமார் 5 ஆயிரம் சிறு கூட்டமைப்புகள் இதில் பங்கேற்கின்றன. பாங்க்., ஊழியர்கள் சுமார் 8 லட்சம் பேர் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர். ரயில்வே துறையினர் மட்டும் பங்கேற்க மாட்டார்கள். இடதுசாரி அமைப்புகளான, சி..டி.யு.,- ..டி.யு.சி., - யு.டி.யு.சி.,- .யு.டி.யு.சி.,காங்கிரஸ்ஐ.என்.டி.யு.சி.,- பி.எம்.எஸ்., எச்.எம்.எஸ்., - டி.யு.சி.., - எல். எல்.., மற்றும் பா..,, சிவசேனா, பாரதிய மஸ்தூர் சங்கம், யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட அமைப்பினர் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர். 

இந்த போராட்டம் குறித்து இந்திய கம்யூ., தலைவர் குருதாஸ் குப்தா கூறுகையில்: இது போன்று அனைத்து சங்கத்தினரும் இணைந்திருப்பது இதுவரை நடக்காத ஒன்று . இது மத்திய அரசு மீதான வெறுப்பையே காட்டுகிறது. ஆர்.பி.., பி.எஸ்.யு.எஸ்., டிரான்ஸ்போர்ட, டெலிகாம், ஆயில்நிறுவனங்கள், கனிமசுரங்க நிறுவனங்கள் 

உள்ளிட்வை இதில் பங்கேற்கும். தொழிலாளர் பிரச்னை குறித்து பார்லி.,யில் பல முறை குரல் எழுப்பியும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. சமீபத்திய தொழிலாளர்மாநாட்டில் எவ்வித அறிவிப்பும் இல்லை. இதனால் ஸ்டிரைக்கில் ஈடுபட வேண்டிய நிர்பந்தம் என்றார் குப்தா. பிரதமர், தொழிலாளர் துறை அமைச்சர் ஆகியோரிடம் பல முறை பேசியிருக்கிறேன். ஆனால் அவர்கள் இதற்கு தீர்வு காண முயற்சிக்கவில்லை. நாங்கள் பேசித்தீர்க்கவே விரும்புகிறோம் என்று மேலும் அவர் தெரிவித்தார்.
கடைசி நேர முயற்சியாக மத்திய அரசு தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் யூனியன் அமைப்புகள் நிராகரித்து விட்டன. மாத இறுதி வரவு- செலவு கடுமையாக பாதிக்கும். 

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

கடையநல்லூரில் போலீஸ் வேடத்தில் அசத்திய நமதூர் வாசிகள்

கடையநல்லூரில் நடந்த படப்பிடிப்பில் போலீஸ் வேடத்தில் அசத்திய நமதூர் வாசிகள்  















ரயிலில் ஓசியில் பயணம் செய்த 2,285 பேர் பிடிபட்டனர்

மத்திய ரயில்வேயின் புறநகர் வழித்தடத்தில் கடந்த இரண்டு வாரத்தில் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ஓசியில் பயணம் செய்த 2285 பேர்  பிடிபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஓசி பயணிகளிடம் இருந்து 10.6 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். டிக்கெட்  எடுக்காமல் பிடிபடுபவர்களிடம் ஸ்மார்ட் கார்டு வாங்கும் படியும் டிக்கெட் பரிசோதகர்கள் கேட்டுக்கொள்கின்றனர். வடாலா, முலுண்ட், குர்லா போன்ற  ரயில் நிலையங்களில் அதிக அளவில் பயணிகளிடம் டிக்கெட் சோதனை செய்யப்பட்டது.

உலகின் முதல் பணக்கார நாடாக கத்தார் தேர்வு

உலகின் செல்வம் மிகுந்த நாடுகளின் பட்டியலில் கத்தார் முதலிடம் பிடித்துள்ளது. அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் இதழ் தயாரித்துள்ள புதிய பட்டியலில் இந்த நாடு தனிநபர் வருமானத்தில் மிகவும் வளமிகுந்த நாடாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது. கத்தாரின் எண்ணெய் வளமும், இயற்கை எரிவாயுமே அந்த நாடு முதலிடத்தைப் பிடிக்கக் காரணமாகியுள்ளது.



கடையநல்லூரில் SDPI சார்பில் சுகாதார தினம் கொண்டாடப்பட்டது


கடையநல்லூரில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் சுகாதார தினம் கொண்டாடப்பட்டது.

மக்களிடம் பெருகிவரும் சுகாதாரமின்மை மற்றும் சுகாதார குறைபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் கடந்த 10ம் தேதி முதல் "ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்' என்ற தலைப்பில் பல்வேறு ஆரோக்கியம் பற்றிய முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ரன்னிங், ஜாக்கிங், வாக்கிங், யோகா போன்ற உடல் ஆரோக்கியம் தொடர்பான பயிற்சிகளை இம்முகாம்களில் நடத்தி வருவதுடன் சுகாதார தினமும் கொண்டாடப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் மத்தியில் தெருக்கள் மற்றும் சாலையோரங்களை சுத்தமாக வைத்திருக்க கூடிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நெல்லை மாவட்டம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மேற்கு அமைப்பின் சார்பில் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியை அமைப்பின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் காஜாமுகைதீன் ஆலிம் துவக்கி வைத்தார். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அமைப்பின் சார்பில் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.


சனி, 25 பிப்ரவரி, 2012

நல்லூரில் (26/02/2012) ஞாயிறு திருமண அழைப்பிதழ்


நண்பர் முஹைதீன் கான் அழைப்பிதழ்

நண்பர் முஹம்மது இஸ்மாயில் அழைப்பிதழ்


நண்பர்கள்  திருமண முஹைதீன் கான் , முஹம்மது இஸ்மாயில் நல்வாழ்விற்காக  இறைவனிடம் பிராத்தனை செய்ய வேண்டுகிறோம் .

மேலான அல்லாஹ் இந்த இரு தம்பதிகளையும்  இம்மையிலும், மறுமையிலும் ஒன்றினைப்பானாக!

பெருமானாரின் (ஸல்) நிறைவான சாந்தி நம் அனைவரின் மீதும் நிறைந்திட அல்லாஹ் அருள் புரிவானாக!

பாரக்கல்லாஹூ லக வபாரக அலைக்க வஜம அ பைனகுமா Fபீஹைர்.


என்றும் அன்புடன்

பாரத் கம்யூனிகேசன்   

தமிழகத்தில் நாளை ஏ.இ.ஓ எழுத்து தேர்வில் 66,948 பேர் பங்கேற்பு


தமிழகத்தில் 200க்கும் மேற்பட்ட மையங்களில் நாளை (26ம் தேதி) ஏ.இ.ஓ எழுத்து தேர்வு நடக்கிறது. நெல்லையில் 7 தேர்வு மையங்களில் 2,760 பேர் பங்கேற்கின்றனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பபடுகிறது. இதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நாளை (26ம் தேதி) எழுத்து தேர்வு நடக்கிறது.

இதில் தமிழ் பாடத்தில் 10,922 பேர், ஆங்கிலம் 8,532, கணிதம் 15,498, இயற்பியல் 7,250, வேதியியல் 8,612, தாவரவியல் 3,868, விலங்கியல் 5,106, வரலாறு 6,228, புவியியல் 932 உட்பட மொத்தம் 66 ஆயிரத்து 948 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

நெல்லை மாவட்டம்: இதில் நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் ஏழு தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை ஜங்ஷன் மதிதா இந்து மேல்நிலைப் பள்ளியில் 416, பாளை கதீட்ரல் பள்ளியில் 364, மேரி சார்ஜென்ட் பள்ளியில் 343, ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளியில் 576, சேவியர் மேல்நிலைப் பள்ளியில் 548, பாளை இக்னேஷியஸ் கான்வென்ட் பள்ளியில் 306, சாராள் தக்கர் பெண்கள் பள்ளியில் 257 பேர் தேர்வு எழுதுகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 2,760 பேர் இத்தேர்வில் பங்கேற்கின்றனர்.

இத்தேர்வு எழுதுபவர்களுக்கு அவர்களின் வீட்டு முகவரிகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஹால் டிக்கெட்டுகள் அனுப்பபட்டு வருகிறது. ஹால் டிக்கெட் கிடைக்க பெறாதவர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய வெப்சைட்டில் தங்கள் விண்ணப்பத்தின் எண்ணை குறிப்பிட்டு அதில் தேர்வு மையம் விபரங்களை நகல் எடுத்து 2 பாஸ்போர்ட் போட்டோக்களுடன் அந்தந்த தேர்வு மையத்திற்கு காலை 9 மணிக்குள் வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கடையநல்லூரில் பெரியார் அருகே கிணற்றில் பிணமாக மிதந்த வாலிபர்

கடையநல்லூரில் பெரியார் அருகே கிணற்றில் பிணமாக மிதந்த வாலிபர் 


கடையநல்லூரில் பேட்டையை சார்ந்த வாலிபர் பேட்டை கூனி கடையில் தற்போதைய உழியராக வேலை செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது இன்று கிணற்றில் குளித்துக்கொண்டிருக்கும் போது இந்த வாலிபருக்கு வலிப்பு வந்ததால் மூச்சு திணறி இறந்திருப்பதாக கூறப்படுகிறது சம்பவம் அறிந்த பொது  மக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்  

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

இணையதள ஊடகங்களுக்கும் கட்டுப்பாடுகள் தேவை: கபில் சிபல்

மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் எழுதிய கவிதை தொகுப்பான 'என்னுள் உலகம் (My World Within)' என்ற புத்தகம் இன்று வெளியிடப்பட்டது. இந்த விழாவில் அவர் பேசியபோது:-

நான் சமூக ஊடகங்களுக்கு எதிரி அல்ல. அனைத்து ஊடகங்கள் நம் நாட்டின் சட்டத்தை சார்ந்துள்ளதை போல இணையதள சமூக ஊடகங்களும் சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். இதனை வலியுறுத்துவதால் நான் பேச்சுரிமைக்கு எதிரானவன் என்று அர்த்தம் அல்ல. நான் ஊடகங்களின் உரிமைக்காக போராடியிருக்கிறேன் என்றார்.

பெட்டல்புதூர் பள்ளிவாசலில் கந்தூரி விழா கொடியேற்றம்


பொட்டல்புதூர் முஹைதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நேற்று நிறைபிறை கொடியேற்றத்துடன் கந்தூரி விழா கோலாகலமாக துவங்கியது. நெல்லை மாவட்டம் கடையம் யூனியன் பொட்டல்புதூரில் மிகவும் பிரசித்தி பெற்ற முஹைதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கந்தூரி விழா கோலாகலமாக நடைபெறும். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மட்டுமின்றி தென் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தங்கியிருந்து சிறப்பு தொழுகை நடத்துவர்.



கந்தூரி விழா கொடியேற்றம் நேற்று மதியம் 2 மணியளவில் கீழுர் ஜமாத் நிறைபிறை கொடி ஊர்வலம் மேளதாளங்கள், வீர விளையாட்டுக்களுடன் அலங்கரிக்கப்பட்ட கொடி யானை மீது ஊர்வலமாக புதுமனை தெரு, வடக்கு புதுமனை தெரு, முகமதுஷா தெரு, நடுத்தெரு, கெங்கையம்மன் கோவில் தெரு, நூலக வீதி உட்பட அனைத்து முக்கிய வீதிகள் வழியாக வந்து பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் தீன் ஒலி முழங்க கோலாகலமாக கொடியேற்றம் நடந்தது.

கொடியேற்ற விழாவில் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து மார்ச் 3ம் தேதி இரவு 8 மணிக்கு பச்சை களை ஊர்வலம் நடக்கிறது. 4ம் தேதி காலை 9 மணிக்கு சுவாமி கம் முத்தவல்லி இனாம்தார் எஸ்.பி.ஷா இல்லத்தில் ராத்திபு வைபவமும், மதியம் 12 மணிக்கு அரண்மணை கொடியேற்றமும் நடக்கிறது. 2 மணிக்கு மேலூர் ஜமாத் பத்தாம் இரவு கொடி ஊர்வலம் ஆரம்பித்து மாலை 6 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. இரவு 10 மணியளவில் ரவணசமுத்திரத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட யானைகள் முன்வர மேளதாளங்கள் வீர விளையாட்டுக்களுடன் சந்தனக்கூடு ஊர்வலம் துவங்கி அதிகாலை பொட்டல்புதூர் வருகிறது.

மார்ச் 5ம் தேதி அதிகாலை 5 மணிக்கு சந்தனக்கூடு ஊர்வலம் பள்ளிவாசல் வந்து சேர்ந்த பின்னர் இனாம்தார் எஸ்.பி.ஷா மூலஸ்தானத்தில் சந்தனம் மெழுகும் வைபவம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு தீப அலங்கார திடலில் தீப அலங்கார வைபவம் நடக்கிறது. மார்ச் 7ம் தேதி 14ம் இரவு சிறப்பு வைபவமும், ராத்திபு ஓதுதலும் நடக்கிறது. மார்ச் 8ம் தேதி அதிகாலை 6 மணிக்கு பக்தர்களுக்கு நேர்ச்சை வழங்கப்படுகிறது.

கந்தூரி விழா ஏற்பாடுகளை சுவாமி கம் முத்தவல்லி இனாம்தார் எஸ்.பி.ஷா தலைமையில் வக்கீல்கள் முகமதுரபி, சம்சுதீன் முன்னிலையில் முஹைதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் மேனேஜிங் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

வியாழன், 23 பிப்ரவரி, 2012

மூன்று பேரை திருமணம் செய்த பெண் யாருக்குச் சொந்தம்: கணவர்கள் மோதல்


முதல் திருமணத்தை மறைத்து ராமநாதபுரத்தை சேர்ந்த இருவரை காதலித்து திருமணம் செய்த பெண், யாருக்கு சொந்தம் என கடைசி இரண்டு கணவர்களிடையே தகராறு ஏற்பட்டது.


பட்டுக்கோட்டை சுப்பிரமணி மகள் ரேணுகா, 27. இவரது 14 வயதில் அதே பகுதியை சேர்ந்த தென்னரசுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். தென்னரசு, வேலை தேடி வெளிநாட்டிற்கு சென்றார். பட்டுக்கோட்டையில் ராமநாதபுரத்தை சேர்ந்த கார் டிரைவர் செந்தில்குமார் என்பவரை ரேணுகா சந்தித்தார். அப்போது முதல் திருமணத்தை மறைத்த ரேணுகா, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் செந்தில்குமாரை திருமணம் செய்து கொண்டார். (செந்தில்குமார் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தவர்).

இருவரும் ராமநாதபுரம் அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்தநிலையில், அரண்மனை அருகே ஒரு கடையில் ரேணுகா வேலைக்கு சென்றார். அங்கு வந்து சென்ற வாடிக்கையாளரான மதுரை திருப்பரங்குன்றம் செந்தில்மனோகரன் என்பவரிடம் ரேணுகா, முதல் இரண்டு திருமணம் மற்றும் குழந்தைகள் விபரத்தை மறைத்தார். இவர்கள், கடந்த ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருமணம் செய்தனர். பின்னர் இவர்கள் ராமநாதபுரம் சக்கரக்கோட்டையில் வசித்து வந்தனர்.

மனைவியை காணவில்லை என செந்தில்குமார் தேடி வந்தபோது, சக்கரக்கோட்டையில் வசித்து வருவது தெரிந்தது. அங்கு சென்று ரேணுகாவை தன்னுடன் அனுப்பி வைக்க செந்தில் மனோகரனை வற்புறுத்தினார். இருவருக்கும் இடையே, ரேணுகா, யாருக்கு சொந்தம் என்பதில் தகராறு ஏற்பட்டது. இருவரும் ராமநாதபுரம் மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

ராமநாதபுரம் இன்ஸ்பெக்டர் மீனாம்பாள், ரேணுகாவிடம் நடத்திய விசாரணையில், ""ஆடம்பரமாகவும், வசதியாகவும் வாழவே, முதல் மற்றும் இரண்டாவது திருமணத்தை மறைத்து மூன்றாவது திருமணமும் செய்து கொண்டேன்,'' என தெரிவித்தார்.

"இனி ராமநாதபுரம் பக்கமே தலைகாட்டக்கூடாது' என எச்சரித்து, பட்டுக்கோட்டையில் உள்ள பெற்றோரிடம் ரேணுகாவை, போலீசார் ஒப்படைத்தனர். இதில் ஏமாற்றமடைந்த செந்தில்மனோகரன், செந்தில்குமாருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

மதக்கலவரம் குஜராத்துக்கு புதிதல்ல - நரேந்திரமோடி விளக்கம்


கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந்தேதி, குஜராத் மாநிலம் கோத்ராவில், சாதுக்கள் சென்ற ரெயில் பெட்டி தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் அந்த பெட்டியில் பயணம் செய்த சாமியார்கள் அனைவரும் கருகி பலியானார்கள். இதையடுத்து, கலவரம் மூண்டது. மாநிலம் முழுவதும் இரு சமூகத்தினரிடையே பயங்கர மோதல் நடந்தது. இந்த சம்பவத்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
 
இந்த கலவரம் தொடர்பாக மாநில உயர் போலீஸ் குழு, சி.பி.ஐ., சுப்ரீம் கோர்ட்டினால் நியமிக்கப்பட்ட குழு ஆகியவை விசாரணை நடத்தின.   குல்பர்க் ஹவுசிங் சொசைட்டி படுகொலை உள்ளிட்ட, 10 கலவர வழக்குகளை விசாரிக்க, கடந்த 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் சுப்ரீம் கோர்ட்டு சிறப்பு விசாரணை குழு (எஸ்.ஐ.டி.) ஒன்றை அமைத்தது. இந்தக்குழு முதல்-மந்திரி நரேந்திரமோடியிடமும் விசாரணை நடத்தியது.
 
சிறப்பு விசாரணை குழுவின் அதிகாரி ஏ.கே. மல்கோத்ரா எழுப்பிய 71 கேள்விகளுக்கும், நரேந்திரமோடி விளக்கமாக பதில் அளித்தார். இம்மாதம்
14-ந்தேதி சிறப்பு புலனாய்வு குழு, விசாரணை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதில், கலவரத்தில் நரேந்திர மோடிக்கு தொடர்பில்லை, அவர் குற்றமற்றவர் என்று கூறப்பட்டுள்ளதாக, செய்திகள் வெளியாகின.  
 
இப்போது, சிறப்பு விசாரணைக்குழு அறிக்கையின் ஒரு பகுதி, அதிகாரப் பூர்வமற்ற வகையில் வெளியாகி இருக்கிறது. அதாவது, நரேந்திரமோடியின் வாக்கு மூலம் வெளியே கசிந்துள்ளது. நரேந்திரமோடி, 2010 மார்ச் 27, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு புலனாய்வுக்குழு முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார். அதன் விபரம் வருமாறு:-
 
குஜராத்தில் 2002-ம் ஆண்டில் மட்டுமே மதக்கலவரம் நடக்கவில்லை. குஜராத்துக்கு மதக்கலவரம் புதிதும் அல்ல. நான் பிறப்பதற்கு முன்பே, குஜராத்தில் பல முறை மதக்கலவரங்கள் நடைபெற்றுள்ளன. கி.பி. 1714-ம் வருடத்தில் இருந்து வரலாற்றை புரட்டிப் பார்த்தால், குஜராத்தில் ஆயிரக்கணக்கான மதக்கலவரங்கள் நடந்திருப்பது பதிவாகி இருக்கும்.  
 
கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் நடந்த உடன், எனது இல்லத்தில் உயர் போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னாள் துணை கமிஷனரான (புலனாய்வு) சஞ்சீவ்பட் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஏனெனில் நடந்தது உயர்மட்டக்குழு கூட்டம் என்பதால், ஜூனியர் அதிகாரியான சஞ்சீவ்பட் அழைக்கப்படவில்லை.
 
இவ்வாறு நரேந்திரமோடி வாக்குமூலம் அளித்துள்ளார்.
 
நரேந்திரமோடி கூட்டிய போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில், தானும் கலந்து கொண்டதாகவும், கலவரத்தை தடுக்க வேண்டாம் என்று போலீஸ் அதிகாரிகளை மோடி கேட்டுக் கொண்டதாகவும், சஞ்சீவ் பட் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.