கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 5 ஜனவரி, 2012

பொதுமக்களை தாக்கிய நகராட்சி ஊழியர் கைது

கடையநல்லூர் நகராட்சிக்குள்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை குடிநீர் வால்வைத் திறப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் பொதுமக்களை தாக்கிய நகராட்சி ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.


கடையநல்லூர் நகராட்சியில் குடிநீர் திறப்பாளராகப் பணிபுரிந்து வருபவர் காளி மகன் பாலையா(53).  இவர் செவ்வாய்க்கிழமை கிருஷ்ணாபுரம் பகுதியிலுள்ள குடிநீர் வால்வைத் திறக்க வந்தாராம். அப்போது அப்பகுதியினர் தண்ணீர் பிரச்னை குறித்து தெரிவித்தனராம்.
இதில் ஏற்பட்ட தகராறில் பாலையா அவர்களைத் தாக்கினாராம். இதில் கிருஷ்ணாபுரம்,முத்தையா மகன் மாரிச்சாமி (44) காயமடைந்தாராம்.


இந்நிலையில் மாரிச்சாமியை தாக்கிய நகராட்சி ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நகராட்சிப் பொறியாளர் ராமலிங்கத்தை நகர்மன்ற உறுப்பினர்கள் முத்துக்கிருஷ்ணன்,ஆறுமுகச்சாமி ஆகியோர் தலைமையில் அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.


இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.


இந்நிலையில் மாரிச்சாமி கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
போலீஸார் வழக்குப்பதிவு செய்து பாலையாவை கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக