கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 24 ஜனவரி, 2012

கடையநல்லூர் பகுதியிலுள்ள நியாய விலைக்கடைகளில் போதிய பணியாளர்கள் இல்லாததால் புதுப்பித்தல் பணி தாமதம்


கடையநல்லூர் பகுதியிலுள்ள நியாய விலைக்கடைகளில் போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தால் குடும்ப அட்டைகளைப் புதுப்பிக்கும் பணியில் தேவையற்ற தாமதம் நிலவி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.


   குடும்ப அட்டைகளைப் புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. வேலை நாள்களில் குடும்ப அட்டைகளைப் புதுப்பிக்க இயாத நிலையுள்ளதாக அரசு ஊழியர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று ஜனவரி 22,29 மற்றும் பிப்ரவரி 5, 12 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் கூட ரேஷன் கடைகளைத் திறந்து வைக்க கூட்டுறவுத் துறைச் செயலர் நிர்மலா தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையும் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.


     இதற்கிடையே, கடையநல்லூர் நகராட்சி 13-வது வார்டுக்குள்பட்ட இக்பால் நகரிலுள்ள அமுதம் நியாய விலைக்கடையில் பணியாற்றிய எழுத்தர் சில மாதங்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டு விட்டாராம். தற்போது அந்தக் கடையில் எடையாளர் மட்டுமே பணியில் உள்ளாராம். இதன் காரணமாக புதுப்பிக்கும் பணியில் கடுமையான தேக்கம் நிலவி வருவதாக அண்ணா தொழிற்சங்கப் பொருளாளர் நாகூர்மீரான் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக பல முறை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் புகார் தெரிவித்தார்.


     மேலும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இது போன்ற பணியாளர் இல்லாத நிலையுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தமிழக அரசு புதுப்பிக்கும் பணி விரைவாக நடைபெறுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், பல கடைகளில் போதிய பணியாளர்கள் இல்லாத நிலையில் புதுப்பிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டு வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


      எனவே இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உடனடியாக மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக