கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 24 ஜனவரி, 2012

பஹ்ரைனில் விஷவாயு தாக்கிய 4 இந்தியர்கள் பலி-ஒருவர் கவலைக்கிடம்

பஹ்ரைனில் பணிபுரிந்து வந்த 4 இந்தியர்கள் கார்பன் மோனாக்சைடு வாயு தாக்கி மூச்சுத் திணறி உயிரிழந்தனர். ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பஹ்ரைனில் உள்ள ஹமாத் நகரில் வெல்டிங் பணியில் ஈடுபட்டு வந்த கேரளாவை சேர்ந்த 5 பேர் ஒரே அறையில் தங்கி இருந்தனர். கடந்த சில நாட்களாக பஹ்ரைனில் கடும் குளிர் நிலவுகின்றது. இதனால் அறையில் குளிரை போக்கும் வகையில், 5 பேரும் நேற்று முன்தினம் இரவு தூங்க செல்லும் முன், பெயிண்ட் டிரம் ஒன்றில் சில மரக்கட்டைகளை போட்டு தீ மூட்டினர்.

அதன்பிறகு 5 பேரும் படுத்து தூங்கினர். இந்த நிலையில் நேற்று காலையில் 5 பேரும் பணிக்கு செல்லவில்லை. இதில் சந்தேகமடைந்த மற்ற பணியாளர்கள், 5 பேரும் தங்கி இருந்த அறைக்கு வந்து பார்த்தனர். அப்போது அறையில் 5 பேரும் மயங்கிக் கிடந்தனர். இதையடுத்து அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவ பரிசோதனையில் சுரேஷ் பாபு (45), பிரியேஷ்(27), நகுலன்(48), லாலு தைதலா (37) ஆகிய 4 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆபத்தான நிலையில் இருந்த கேரள மாநிலம் பத்தனம்திட்டாவை சேர்ந்த சுனில் சசிதரன் (53) என்பவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. 4 பேரும் அறையில் கார்பன் மேனாக்சைடு வாயு தாக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு பலியானதாக பரிசோதனையில் தெரிய வந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக