கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 24 ஜனவரி, 2012

வள்ளியூர் அருகே பாயாசம் சாப்பிட்ட தாய்-மகன் சாவு


பூச்சிமருந்து கொட்டிய வெல்லத்தை பயன்படுத்தி தயாரித்த பாயாசத்தை சாப்பிட்டதால் இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-  
 
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே பணகுடி பக்கமுள்ள முத்துராஜபுரம் தெற்குதெருவை சேர்ந்தவர் முருகன்(வயது38). இவர் வள்ளியூரில் உள்ள துணி ஏற்றுமதி நிறுவனத்தில் டெய்லராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி சுமதி(32). இவர்களது மகன்கள் சுபாஷ்(15), சுதீஷ்(7). நேற்று பள்ளி விடுமுறை என்பதால் வீட்டிலிருந்த சுபாசும், சுதீசும் பாயாசம் செய்துதருமாறு தாய் சுமதியிடம் கேட்டுள்ளனர்.
 
இதனால் சுமதி, வீட்டில் பொங்கலுக்காக வாங்கிய வெல்லத்தில் மீதியிருந்ததை வைத்து சுமதி பாயாசம் வைத்தார்.   அந்த பாயாசத்தை சுமதி, அவரது மகன்கள் சுபாஷ், சுதீஷ், கணவர் முருகன், முருகனின் அண்ணன் தங்கத்துரையின் மனைவி சாந்தி(45), சுமதியின் தங்கை லட்சுமியின் மகன் செல்வின்(9) ஆகியோர் சாப்பிட்டனர்.
 
இந்நிலையில் பாயாசம் சாப்பிட்ட சிறிதுநேரத்தில் அவர்கள் அனைவரும் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இதனைத் தொடர்ந்து முருகன், அவரது மனைவி சுமதி, அவர்களது மகன்கள் சுபாஷ், சுதீஷ், சாந்தி, சிறுவன் செல்வின் ஆகிய 6பேரும் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.  
 
பின்பு அவர்கள் மேல் சிகிச்சைக்காக பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். ஆனால் வரும் வழியிலேயே சுமதியும், அவரது மகன் சுதீசும் பரிதாபமாக இறந்தனர்.
 
மற்ற 5பேரும் பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பணகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பாயாசம் சாப்பிட்ட நிலையில் தாய்-மகன் இறந்ததற்கான காரணம் தெரியவந்தது.   பொங்கல் பண்டிகைக்காக வாங்கிய வெல்லம் மற்றும் பச்சரிசியில் மீதமிருந்ததை வீட்டின் பரண் மேல் சுமதி வைத்திருந்தார். அதன் அருகிலேயே பூச்சிமருந்து டப்பாவும் வைக்கப்பட்டிருந்தது. அந்த பூச்சிமருந்து டப்பா எப்படியோ சரிந்து விழுந்துள்ளது. இதனால் டப்பாவில் இருந்த பூச்சி மருந்து வெல்லத்தின் மீது கொட்டியுள்ளது.
 
இந்நிலையில் சுபாசும். சுதீசும் நேற்று பாயாசம் செய்துதருமாறு கேட்டதால், பரண்மேல் இருந்த வெல்லத்தை சுமதி எடுத்தார். அப்போது வெல்லத்தின் மீது பூச்சிமருந்து கொட்டிக்கிடப்பதை சுமதி பார்த்துள்ளார். பூச்சிமருந்து கொட்டிய இடத்தை மட்டும் வெட்டிப்போட்டுவிட்டு மீதமுள்ள வெல்லத்தில் பாயாசம் தயாரித்தால் எதுவும் ஆகாது என்று சுமதி நினைத்தார்.  
 
அதன்படி அவர், வெல்லத்தில் பூச்சிமருந்து கொட்டிய இடத்தை மட்டும் வெட்டிப்போட்டுவிட்டு, மீதமுள்ள வெல்லத்தை வைத்து பாயாசம் தயாரித்து தனது மகன்கள், கணவர் உள்ளிட்டோருக்கு கொடுத்து தானும் சாப்பிட்டுள்ளார். சிறிதுநேரத்தில் அனைவரும் வாந்தி எடுக்கவே, வெல்லத்தில் பூச்சிமருந்து கொட்டியிருந்த விவரத்தை கணவர் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் சுமதி கூறியிருக்கிறார்.
 
இதனைக்கேட்ட அக்கம் பக்கத்தினர் சிலர், வாந்தி எடுத்துவிட்டதால் எதுவும் ஆகாது என கூறியிருக்கிறார்கள். இதனை நம்பி பாயாசம் சாப்பிட்ட யாரும் ஆஸ்பத்திரிக்கு செல்ல வில்லை.  
 
இந்நிலையில் பாயாசம் சாப்பிட்ட அனைவரும் மயங்கிவிழுந்த பிறகே அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து அவர்கள் அனைவரையும் ஆஸ்பதிரிக்கு கொண்டு சென்றுள்ளனர். மிகவும் காலதாமதமாக ஆஸ்பத்திரிக்கு வந்ததன் காரணமாக சுமதியும், அவரது மகன் சுதீசும் பரிதாபமாக இறந்தனர்.
 
மற்ற 5பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிக்ச்சை அளிக்கப்பட்டது. இதனால் அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இருந்தபோதிலும் அதிகஅளவு பாயாசம் சாப்பிட்ட முருகனின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக