கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 17 ஜனவரி, 2012

மேலூரில் இந்து, முஸ்லிம்கள் இணைந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல்

மேலூரில் முஸ்லிம் மக்கள் அளிக்கும் பட்டாடையை அம்மனுக்கு அணிவித்து சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த தும்பைப்பட்டியில் வீரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுத்தோறும் சமத்துவ பொங்கல் கொண்டாடப்படுகின்றது.

பொங்கல் பண்டிகை அன்று அதே பகுதியில் வசித்து வரும் முஸ்லிம் குடும்பம் ஒன்று காலம் காலமாக வீரகாளியம்மனுக்கு அணிவிக்க பட்டாடை கொடுத்து வருகிறது. இந்த ஆண்டு அந்த குடும்பத்தைச் சேர்ந்த நாகூர் அனீபா என்பவர் தனது தலையில் பட்டாடையும், பூமாலைகளும் சுமந்து, தாரை தப்பட்டைகள் முழங்க வீரகாளியம்மன் கோயில் மந்தைக்கு வந்தார்.

அவரை வரவேற்று பதினெட்டுப்பட்டியைச் சேர்ந்த 7 அம்பலக்காரர்களும் பட்டாடையை பெற்றுக் கொண்டனர். கோவில் பூஜாரியான தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் பட்டாடையை அம்மனுக்கு சாத்தி அபிஷேம் செய்தார். அதன்பிறகு வழக்கம் போல பூஜாரி கோவில் மாட்டை அவிழ்த்து விட்டு, மஞ்சுவிரட்டை துவக்கி வைத்தார்.

மேலூரில் நடந்த சமத்துவப் பொங்கல் விழாவில் இரு மதங்களை சேர்ந்த மக்களும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக