கடையநல்லூர் அருகே 25 கிலோ எடை கொண்ட ஜெலட்டின் குச்சிகளும், 200 டெட்டனேட்டர்களும் நேற்று போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. இருவர் கைது செய்யப்பட்டனர்.
கடையநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவன், துரைப்பாண்டி, செந்தில்வேலன், சம்சுதீன் மற்றும் போலீசார் சொக்கம்பட்டி போலீஸ் ஸ்டேனுஷக்குட்பட்ட புன்னைவனம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரிடம் வாகன சோதனை நடத்தியபோது உரிமம் இல்லாமல் வாகனத்தில் வைத்திருந்த 25 கிலோ எடை கொண்ட ஜெலட்டின் குச்சிகளும், 200 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்களும் இருந்தது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து போலீசார் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். இருசக்கர வாகனத்தில் வந்த கே.எம்.மீனாட்சிபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முப்புடாதி (எ) விஜி (29), நன்னகரம் இந்திராநகரை சேர்ந்த ஈஸ்வரசங்கரசாம்ராஜ் (45) ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். இருசக்கர வாகனத்தில் உரிமம் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக கல்குவாரி நடத்தி வருவதாக கூறப்படும் குருக்கள்பட்டி கீழத்தெருவை சேர்ந்த செல்லத்துரை மகன் பாலசுப்பிரமணியன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகரின் பினாமி தான் பாலசுப்பிரமணியன் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுலைமான் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக