கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 21 ஜனவரி, 2012

நெல்லை அருகே இளம்பெண் கொலை: 'முறைதவறி உறவு வைத்ததால் கொன்றோம்' கைதான சித்தப்பா பரபரப்பு வாக்குமூலம்

நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள அழகிய பாண்டியபுரத்தை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 50). இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு முத்துக்குமார், கனகமணி ஆகிய 2 மகன்கள் உள்ளனர். பெண் குழந்தை இல்லாததால் மாரியம்மாள் தனது அக்காள் சங்கிலிமாரியம்மாள் மகன் முருகம்மாள் (வயது26) என்பவரை தங்கள் மகளாக பாசத்துடன் வளர்த்து வந்தனர்.

முருகம்மாள் தனது தாய் வீடான மேலகுன்னத்தூருக்கு சென்று வந்தாலும் பெரும்பாலான நாட்கள் அழகிய பாண்டியபுரத்தில் சித்திவீட்டிலேயே வசித்து வந்தார். துரைராஜ்- மாரியம்மாளின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

அவர்கள் கேரளாவில் வசித்து வருகிறார்கள். மணிகண்டன் தனது பெற்றோரை பார்ப்பதற்காக அழகியபாண்டியபுரம் வந்து செல்வார். இந்த நிலையில் மணிகண்டனுக்கும் முருகம்மாளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. முருகம்மாளுக்கு மணிகண்டன் அண்ணன் முறை ஆவார். திருமணமானவர், அண்ணன் என்றும் பாராமல் மணிகண்டன் மீது முருகம்மாளுக்கு காதல் உண்டானது. இதனிடையே முருகம்மாளுக்கு அவரது பெற்றோரும், சித்தப்பா-சித்தியும் மாப்பிள்ளை பார்த்தனர்.

இதை அறிந்த முருகம்மாள் நான் மணிகண்டனைத்தான் திருமணம் செய்வேன் என்று கூறினார். இதை அவர்கள் கண்டித்தனர். ஆனால் முருகம்மாள் மணிகண்டனை திருமணம் செய்வதில் விடாப்பிடியாக இருந்தார். நேற்று முருகம்மாளிடம் விசயத்தை பேசி மனதை மாற்ற அவரது தாய்மாமன் மாடசாமி வந்தார். சித்தப்பா துரைராஜ், தம்பி கனகமணி ஆகியோரும் அருகில் இருந்து முருகம்மாளிடம் பேசினர்.

மணிகண்டனை மறந்துவிட்டு வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்யும்படி கூறினர். அதற்கு முருகம்மாள் பிடிவாதமாக மறுத்தார். இது அவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் 3 பேரும் முருகம்மாளை அரிவாளால் வெட்ட முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பித்த முருகம்மாள் அருகில் உள்ள மணிகண்டனின் வீட்டுக்குள் ஓடினார். பின்னால் 3 பேரும் துரத்தியபடி ஓடினார்கள். இதை பார்த்த மணிகண்டன் அங்கிருந்து தப்பினார். ஆத்திரம் தீராத 3 பேரும் முருகம்மாளை சரமாரியாக வெட்டினர். இதில் முருகம்மாளின் தலை, கழுத்து போன்ற இடங்களில் வெட்டு விழுந்தது.

படுகாயம் அடைந்த முருகம்மாள் ரத்த வெள்ளத்தில் அங்கேயே துடிதுடித்து இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திரபிதரி, தாழையூத்து டி.எஸ்.பி.(பொறுப்பு) மதிவாணன், மானூர் இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன், சப்- இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மானூர் போலீசார் முருகம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை குறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைராஜை கைது செய்தனர். மாடசாமி, கனகமணி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். கைதான துரைராஜ் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:- எனக்கு பெண் குழந்தை இல்லாததால் முரும்மாளை என் மகள் போல் பாவித்து வளர்த்து வந்தேன். மேலகுன்னத்தூரில் இருந்து முருகம்மாள் அடிக்கடி இங்கு வருவார்.

கடந்த 6 மாதமாக அவளை எனது வீட்டிலேயே தங்கவைத்து திருமண ஏற்பாடுகள் செய்தேன். ஆனால் அவளோ தனக்கு அண்ணன் முறை கொண்ட மணிகண்டனுடன் தொடர்பு வைத்திருந்தார். இதை பக்குவமாக எடுத்து சொல்லியும் அவள் கேட்கவில்லை. மணிகண்டனைதான் திருமணம் செய்வேன் என்று பிடிவாதமாக கூறினாள். இதனால் எங்கள் குடும்பத்துக்கு அவமானம் ஏற்பட்டுவிடும் என்று கருதினோம். பலமுறை எடுத்து சொல்லியும் கேட்காததால் முருகம்மாளை வெட்டி கொலை செய்தோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக