கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 21 ஜனவரி, 2012

இத்தாலி கப்பல் விபத்து: உயிர் தப்பிய மேலும் 6 தமிழர்கள் இன்று சென்னை திரும்பினார்கள்

இத்தாலி நாட்டின் கடல் பகுதியில் டஸ்கன் தீவு அருகே சென்று கொண்டிருந்த 'கோஸ்டா கன்கார்டியா' என்ற சொகுசு கப்பல், கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாறை மீது மோதி விபத்துக்குள்ளானது. கப்பல் உடைந்ததால் ஒரு பக்கமாக சாய்ந்து கடலில் மூழ்கியது. அதிநவீன அந்த சொகுசு கப்பலில் மொத்தம் 4,200 பேர் இருந்தனர். அவர்களில் 1,050 பேர் கப்பல் ஊழியர்கள். மற்ற அனைவரும் சுற்றுலா பயணிகள்.


அந்த கப்பலில் 203 இந்தியர்கள் இருந்தனர். அவர்களில் ஒரே ஒருவர் மட்டுமே சுற்றுலா பயணி ஆவார். மற்ற 202 இந்தியர்களும் அந்த கப்பலில் பணியாற்றி வந்த ஊழியர்கள் ஆவர். கப்பல் விபத்துக்குள்ளானபோது, 15 பேர் காணாமல் போய்விட்டனர். 60 பேர் காயம் அடைந்தனர். அவர்களுடன் சுற்றுலா பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர். இந்தியர்களில் ஒருவர் மட்டும் காணாமல் போய்விட்டார். ஒருவர் கப்பலிலேயே உள்ளார். மற்ற 201 பேரும் மீட்கப்பட்டு விட்டனர்.

இந்தியா வெளியுறவுத்துறை மூலம் 201 பேரையும் தாயகம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று சிறப்பு விமானம் மூலம் 72 இந்தியர்கள் டெல்லி வந்து சேர்ந்தனர். மும்பைக்கு 38 பேர், சென்னை, ஐதராபாத்துக்கு தலா 9 பேர், பெங்களூருக்கு 2 பேர் மற்றும் கொல்கத்தாவுக்கு ஒருவர் திரும்பினார்கள். மற்ற அனைவரும் இன்று காலை இந்தியா வந்தனர். சென்னைக்கு இன்று காலை துபாய் வழியாக வந்த விமானத்தில், இத்தாலி கப்பல் விபத்தில் உயிர் தப்பிய 8 பேர் வந்தனர்.

அவர்கள் விவரம் வருமாறு:-

1. வடிவேல்- ராஜபாளையம் 2. கோபால்- நெல்லை 3. ராக்மில்லர்- மதுரை 4. கருப்பன்- மதுரை 5. மணிகண்டன்- ஒட்டன்சத்திரம் 6. குணசேகரபிரபு- ராமநாதபுரம் 7. ரப்பாசு- மணிப்பூர் 8. ஏசியா- மணிப்பூர். இவர்கள் 8 பேரையும் உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்று அழைத்துச் சென்றனர். அவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் செல்ல அரசு அதிகாரிகள் தேவையான உதவிகளை செய்து கொடுத்தனர்.

கப்பல் விபத்து பற்றி நெல்லை கோபால் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

கோஸ்டாகன் கார்டியா கப்பலில் நான் வேலை பார்த்து வந்தேன். வெள்ளிக்கிழமை அந்த கப்பல் இத்தாலி கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தது. திடீரென டம், டம் என பயங்கர சத்தம் கேட்டது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கப்பல் சாய்ந்ததும் பெரிய விபத்து ஏற்பட்டுவிட்டதை உணர்ந்தோம். உடனடியாக எங்கள் அனைவரையும் மீட்புக்குழுவினர் காப்பாற்றினார்கள்.

டஸ்கன் தீவில் நாங்கள் அனைவரும் தங்க வைக்கப்பட்டோம். அங்கு சாப்பிட உணவு கிடைக்காததால் சிறிது தவிக்க நேரிட்டது. உடமைகள் அனைத்தும் பறிபோய் விட்டதால் மாற்று உடை கூட இல்லாமல் இருந்தோம். இத்தாலி நாட்டு தொண்டு அமைப்பை சேர்ந்தவர்கள் எங்களுக்கு உடைகள் தந்து உதவினார்கள். நாங்கள் தாயகம் திரும்ப இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் எல்லா உதவிகளும் செய்து கொடுத்தனர்.

இதற்காக நாங்கள் அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு நெல்லை கோபால் கூறினார். கப்பலில் பணிபுரிந்த இந்தியர்களுக்கு கப்பல் நிறுவனம் உரிய உதவித்தொகை வழங்கி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக