கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 5 ஜனவரி, 2012

10 சட்டசபை தொகுதிகளில் 21 லட்சம் வாக்காளர்கள் நெல்லை மாவட்டத்தில் இன்று இறுதி பட்டியல் வெளியீடு

நெல்லை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகளில் இன்று (5ம் தேதி) போட்டோவுடன் கூடிய வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்படுகிறது. மாவட்டத்தில் 21 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் இருப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் போட்டோவுடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் மாதம் 24ம் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், மாற்றம் செய்தல் பணிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது.தொடர்ந்து இந்த விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை நடந்தது. இதுதொடர்பாக வீடு, வீடாக விசாரணையையும் அதிகாரிகள் மேற்கொண்டனர். 

இதில் தகுதியானவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். தற்போது அனைத்து விபரங்களுடன் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை ஏற்கனவே வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 10 லட்சத்து 8 ஆயிரத்து 399 ஆண் வாக்காளர்கள், 10 லட்சத்து 7 ஆயிரத்து 278 பெண் வாக்காளர்கள், மற்றவர்கள் 10 உட்பட மொத்தம் 20 லட்சத்து 15 ஆயிரத்து 687 வாக்காளர்கள் இருந்தனர். கடையநல்லூர் தொகுதியில் அதிகபட்சமாகவும், வாசுதேவநல்லூர் (தனி) தொகுதியில் குறைந்தபட்சமாகவும் வாக்காளர்கள் இருந்தனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். இதில் 10 சட்டசபை தொகுதிகளிலும் 31 ஆயிரத்து 765 புதிய வாக்காளர்களும் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் இன்று (5ம் தேதி) போட்டோவுடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை இறுதி பட்டியலில் 21 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் இருப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பட்டியல் அனைத்து ஆர்.டி.ஓ, தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் வாக்காளர்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது.தொடர்ந்து விரைவில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், மாற்றம் செய்தல் பணிகளுக்கு வாக்காளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக