கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

மினிபஸ் கண்ணாடி உடைப்பு : சேர்ந்தமரம் அருகே பரபரப்பு


சேர்ந்தமரம் அருகே மினிபஸ் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

சங்கரன்கோவிலிலிருந்து வீரசிகாமணிக்கு மினிபஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் லூர்துராஜ் (27) ஓட்டி வந்தார். மினிபஸ் குலசேகரமங்கலம் அருகே உள்ள தென்னந்தோப்பு அருகே வந்தபோது தென்னந்தோப்பில் மறைந்து இருந்த மர்ம நபர்கள் திடீரென பஸ்சை வழி மறித்து கல்வீசி தாக்கினர்.

இதில் மினி பஸ் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. பஸ்சில் இருந்த பயணிகள் அலறல் சத்தத்துடன் வெளியே ஓடிவந்தனர். இந்த அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதற்குள் அந்த கும்பல் தப்பியோடியது. இதுபற்றி டிரைவர் லூர்துராஜ் சேர்ந்தமரம் போலீசில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் அருள் வழக்குபதிவு செய்து குலசேகரமங்கலத்தை சேர்ந்த சின்னக்குட்டி மகன் முருகன் (எ) ஒத்தக்கண்ணு முருகன், முத்துராஜ் மகன் மகேஷ், பொத்தையன் மகன் மாரிச்செல்வம், வன்னியன் மகன் சங்கையாண்டி (எ) சங்கர், மயில்ராவணன் மகன் மோகன்தாஸ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

இது சம்பந்தமாக சேர்ந்தமரத்தில் இருந்து சங்கரன்கோவில், புளியங்குடி, சுரண்டை, கடையநல்லூர் வழியாக செல்லும் அனைத்து தனியார் மற்றும் அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மிகவும் சிரமத்திற்குள் உள்ளாயினர். பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக