கடையநல்லூர் ஆடு அறுப்பு மனையில் இறந்துபோன ஆட்டை அறுத்து விற்பனை செய்ய முயன்றதால் பொதுமக்கள் ஆடறுப்பு மனையை முற்றுகையிட்டனர். இதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் பறிமுதல் செய்தது.
கடையநல்லூர் நகராட்சி பகுதியில் ஆடறுப்பு மனை பல லட்சம் செலவில் மலம்பாட்டை சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆடறுப்பு மனையில்தான் ஆடுகள் அறுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று இப்பகுதிக்கு இறந்து போன ஆட்டை கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆட்டினை கறிக்காக உரிக்கும்போது பொதுமக்கள் சிலர் அதனை கண்டறிந்துவிட்டனர்.
இதனை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த கவுன்சிலர்கள் திவான் மைதீன், நயினாமுகம்மது, அலிபத், காஜாமுகைதீன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் அங்கு வந்தனர். இதுதொடர்பாக நகராட்சி தலைவருக்கு கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து அப்பகுதிக்கு நகராட்சி தலைவர் சைபுன்னிசா, கமிஷனர் அப்துல்லத்தீப், சுகாதார அலுவலர் கணேசமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் கைலாசம், பாஸ்கர், உணவு பாதுகாப்பு அலுவலர் மகேஸ்வரன் ஆகியோர் விரைந்து வந்தனர்.
இறந்து போன ஆடுதான் அறுப்பதற்காக கொண்டுவரப்பட்டதா என்பது குறித்து உறுதி செய்யும் வகையில் கடையநல்லூர் கால்நடை உதவி மருத்துவர் சேக்உதுமான் ஆட்டினைசோதனை மேற்கொண்டார். கொண்டுவரப்பட்டது இறந்த ஆடுதான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த ஆட்டினை உரக்கிடங்கில் புதைப்பதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டது.
உண்பதற்கு தகுதியற்ற இறந்து போன ஆட்டினை விற்பனைக்காக ஆட்டறுப்பு மனைக்கு கொண்டு வந்த சம்பவத்தினையடுத்து அப்பகுதி மக்கள் ஆவேசமடைந்தனர்.
பொதுமக்களை நகராட்சி தலைவர், கமிஷனர் மற்றும் கவுன்சிலர்கள் சமரசப்படுத்தினர். இந்நிலையில் ஆடறுப்பு மனை ஏலதாரர் கணேசன் மற்றும் அப்பணியை மேற்கொள்ள வந்த தட்சணாமூர்த்தி ஆகியோருக்கு நகராட்சி மூலம் நோட்டீஸ் கொடுக்க இருப்பதாக சுகாதார அலுவலர் கணேசமூர்த்தி தெரிவித்தார்.
இந்த சம்பவத்தையடுத்து கடையநல்லூர் நகராட்சி பகுதியில் நேற்று காலை 8 மணி முதல் சுகாதார பிரிவு அதிகாரிகள் ஆடறுப்பு மனைகளில் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். நகராட்சியில் நேற்று செயல்பட்ட அனைத்து ஆடறுப்பு கடைகளும் மூடப்பட்டு ஆடுகள் அறுப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கத்திகள், கட்டைகள், போன்றவைகளை பறிமுதல் செய்து கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் கடையநல்லூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக