கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 17 ஜனவரி, 2012

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு அணை பிரச்னை : கேரளாவில் நாளை பந்த்


முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக கேரளாவில் நாளை (18ம் தேதி) பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளால் இப்பிரச்னை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக கடந்த இரண்டு மாதங்களாக தமிழக, கேரள மாநிலங்களில் பதட்டம் நிலவியது. தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு சென்ற ஐயப்ப பக்தர்கள் கேரளாவில் பல இடங்களில் தாக்கப்பட்டனர். அவர்கள் சென்ற வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தமிழக-கேரள எல்லை பகுதிகளில் பல்வேறு கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் 13 வழிகளில் ம.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம் நடத்தி கடும் எதிர்ப்பை காட்டினர்.

தினமும் முற்றுகை போராட்டம், ஆர்ப்பாட்டம் என கம்பம், குமுளி பகுதியில் பதட்டமான நிலையே தொடர்ந்தது. இதனால் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் நெல்லை மாவட்டம் புளியரை வழியே சென்று வந்தனர். ஐயப்ப பக்தர்கள் கேரளாவில் தாக்கப்பட மாட்டார்கள் என கேரள அரசு உறுதியளித்ததை அடுத்து மகரஜோதிக்கு சபரிமலைக்கு அதிகமான ஐயப்ப பக்தர்கள் சென்று வந்தனர். நேற்று முன்தினம் பொங்கல் தினத்தன்று மகரஜோதி வழிபாடு சபரிமலையில் நிறைவு பெற்றது. தமிழக ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு மகிழ்ச்சியுடன் சென்று வந்தனர். இந்த மகிழ்ச்சி இரண்டு நாட்கள் மட்டுமே நீடித்துள்ளது.

தமிழக ஐயப்ப பக்தர்களின் வருமானத்தை கணக்கிட்டு அமைதி காத்த கேரளாவை சேர்ந்தவர்கள் மகரஜோதி வழிபாடு முடிந்ததும் மீண்டும் தங்களது போராட்டத்தை துவக்க ஆயத்தமாகி விட்டனர். கேரளாவில் முல்லைப் பெரியாறு அணையை உடைத்து விட்டு புதிய அணை கட்ட கோரி நாளை (18ம் தேதி) பந்த் நடத்த முல்லைப் பெரியாறு மீட்பு இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக இந்த அமைப்பினர்தான் முல்லைப் பெரியாறு அணைக்காக கேரளாவில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சபரிமலை மகரஜோதி வரை அமைதியாக இருந்து விட்டு இப்போது இந்த அமைப்பினர் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளது இரு மாநில பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக இருக்கிறது. கேரளாவில் வசிக்கும் தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும் மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னையில் மத்திய அரசு தொடர்ந்து மவுனம் சாதித்து வருவது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல என தமிழுணர்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக மீண்டும் போராட்டம் நடத்தினால் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு பால், காய்கறிகள், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல விட மாட்டோம் என முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு இயக்கத்தினர், தமிழுணர்வாளர்கள் கூறியுள்ளனர்.

கேரளாவில் நாளை பந்த் போராட்டம் காரணமாக கேரள எல்லை பகுதியான நெல்லை மாவட்டம் புளியரை எஸ் வளைவு பகுதியில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக