கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

புதன், 18 ஜனவரி, 2012

நெல்லை அருகே ஆற்றில் மூழ்கி தந்தை, மகன் பலி

நெல்லை அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தந்தை, மகன் இறந்தனர்.தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகேயுள்ள கொத்தாளி பஜனை கோயில் தெருவை சேர்ந்த லட்சுமிஅய்யா மகன் சுரேஷ்(40). இவர் நேற்று தன் மனைவி கலைமணி(30), மகன் ஹரிஹரசுதன்(8) மற்றும் உறவினர்களுடன் வேனில் சீவலப்பேரி கோயிலுக்கு வந்தார்.அனைவரும் தாமிரபரணி ஆற்றில் இறங்கி ஆழம் குறைந்த இடத்தில் குளித்தனர். அப்போது அவர்கள் தண்ணீரில் மூழ்கினர். தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்க சுரேஷ் போராடினார். அவரும் தண்ணீரில் மூழ்கினார். ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த சிலர் தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்க முயன்றனர். அப்பகுதி மக்கள் ஆற்றங்கரையில் திரண்டு மூழ்கியவர்களை மீட்டனர்.ஆற்றுத்தண்ணீரில் இருந்து மீட்கப்பட்ட ஹரிஹரசுதன், கலைமணி, சுரேஷின் உறவினர்கள் ஸ்ரீராம்(13), ஜெயச்சந்திரன் என்ற சந்துரு(15) அரசு ஆம்புலன்ஸ் 108 மூலம் பாளை. ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

ஆற்றில் மூழ்கிய சுரேஷை மீட்க முடியவில்லை.பாளை. தீயணைப்பு நிலைய முன்னணி தீயணைப்பாளர் அடைக்கலம் தலைமையில் பணியாளர்கள் ஆற்றில் இறங்கி சுரேஷை தேடினர். சிறிதுநேரத்தில் சுரேஷ் உடல் மீட்கப்பட்டது. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட ஹரிஹரசுதனும் இறந்தான். தந்தை, மகன் உடல்களை கண்டு குடும்பத்தினர், உறவினர்கள் கதறினர். இதுகுறித்து சீவலப்பேரி இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் விசாரணை நடத்தினார்.

மணல் கொள்ளையால் நேர்ந்த விபரீதம்
சீவலப்பேரி ஆற்றில் குளிக்கும் வெளியூர் நபர்கள் தண்ணீரில் மூழ்கி பலியாவது ஆண்டுதோறும் தொடர்கதையாக உள்ளது. ஆற்றில் ஆங்காங்கே பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளப்பட்டுள்ளதால் அபாயக்குழிகள் உருவாகியுள்ளது. இதை அறியாமல் ஆழம் குறைந்த இடம் என நினைத்து ஆற்றில் குளிப்பவர்கள் அதை அடுத்துள்ள மிக ஆழமான பகுதியில் காலை வைத்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து வருகின்றனர்.

நேற்றைய சம்பவத்தில் ஆற்றில் குளித்தவர்களுக்கு நீச்சல் தெரியாது, ஆற்றில் குளித்த போது 10 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டதால் தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி உயிர் இழந்தனர் என தீயணைப்புத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக