கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 26 ஜனவரி, 2012

குற்றாலத்தில் இன்று மரத்தில் கார் மோதி விபத்து: 2 டாக்டர்கள் உள்பட 3 பேர் சாவு


குற்றாலத்தில் இன்று அதிகாலை கார் மரத்தில் மோதி திருமண விழாவுக்கு வந்த 2 டாக்டர்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 2 டாக்டர்கள் உள்பட 3 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த பரிதாப சம்பவம் பற்றி விபரம் வருமாறு:-


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் கிராமத்தை சேர்ந்தவர் தனுஷ்கோடி, இவர் ராஜபாளையம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. இவரது மகன் ரவிகுமரன் (வயது 29). இவர் ரஷ்யாவில் எம்.பி.பி.எஸ் முடித்து டாக்டராக பணியாற்றி வந்தார். மேலும் புளியங்குடி நகராட்சி துணை தலைவராகவும் இருந்தார். இவருடன் தென்காசி அருகே உள்ள மேலமெஞ்ஞானபுரத்தை சேர்ந்த டாக்டர் அன்பரசன் என்பவரும் எம்.பி.பி.எஸ். முடித்துள்ளார்.
அன்பரசனுக்கு இன்று தென்காசியில் திருமணம். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக இவர்களது நண்பர்கள் மதுரை எழில்நகரை சேர்ந்த டாக்டர் கார்த்திக் (25), போடி ஜீவா நகரை சேர்ந்த டாக்டர் தினேஷ் (27), ராஜபாளையம் பச்சை மடத்தை சேர்ந்த டாக்டர் ரகு (28) ஆகியோர் நேற்று இரவே குற்றாலம் வந்தனர்.
குற்றாலம் அருகே உள்ள நன்னகரத்தில் டாக்டர் ரவிக்குமாருக்கு சொந்தமாக ஒரு கியாஸ் ஏஜென்சி உள்ளது. இந்த கியாஸ் ஏஜென்சி குடோனில் டாக்டர்கள் 4 பேரும் ஓய்வெடுத்தனர். இன்று அதிகாலை 3.30 மணி அளவில் இவர்கள் அனைவரும் ஒரு காரில் பழைய குற்றால அருவியில் குளிப்பதற்காக சென்றனர்.
காரை குற்றாலம் நன்னகரத்தை சேர்ந்த டிரைவர் இசக்கிமுத்து (29) என்பவர் ஓட்டினார். அவர்களுடன் பாதுகாப்பாக வாசுதேவநல்லூர் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த கியாஸ் கம்பெனி மேலாளர் சின்னசாமி (40) என்பவரும் காரில் சென்றார். கார் பழைய குற்றாலம், செண்பகாகுளம் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக ரோட்டோரம் உள்ள மரத்தில் பயங்கரமாக மோதியது.
இதில் காரின் ஒரு பகுதி நொறுங்கியது. காரில் இருந்த டாக்டர் ரவிகுமரன், டாக்டர் கார்த்திக், கியாஸ் கம்பெனி மேலாளர் சின்னசாமி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். டிரைவர் இசக்கி முத்து, டாக்டர்கள் தினேஷ், ரகு ஆகிய 3 பேரும் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்கள்.
அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு தென்காசி டி.எஸ்.பி. பாண்டியராஜ், இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் விரைந்து சென்று காயமடைந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்தில் பலியான டாக்டர் ரவிகுமரன் வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. டாக்டர் துரையப்பாவின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக