கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

புதன், 11 ஜனவரி, 2012

அரசு உத்தரவை கண்டு கொள்ளாத கல்வி அதிகாரிகள்


தமிழகத்தில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம்களை நடத்தாததால் ஆசிரிய, ஆசிரியைகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் அனைத்து அரசு நகராட்சி உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள்/பணியாளர்கள் தொடர்பான தேர்வு நிலை, சிறப்பு நிலை, தகுதி காண் பருவம், பணிவரன்முறை ஆணைகள் வழங்குவதில் காலதாமதம், பணிப் பதிவேடுகள் பாதுகாப்பு உட்பட பல்வேறு கருத்துருக்கள் தொடர்பாக ஆண்டுக்கு மூன்று முறை சிறப்பு குறை தீர்க்கும் முகாம்களை முதன்மை கல்வி அலுவலர்கள் நடத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.
முதற்கட்டமாக டிசம்பர் மாதம் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரையிலும், 2ம் கட்டமாக ஏப்ரல் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரையிலும், 3ம் கட்டமாக ஆகஸ்ட் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரையிலும் நடத்த பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் உத்தரவிட்டார்.

இதே போன்று, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு ஆண்டு தோறும் 4 கட்ட சிறப்பு முகாம்களை அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த முகாம்கள் முதற்கட்டமாக டிசம்பர் மாதம் 15 மற்றும் 16ம் தேதிகளிலும், 2ம் கட்டமாக மார்ச் 15 மற்றும் 16ம் தேதிகளிலும், 3ம் கட்டமாக ஜூன் 15 மற்றும் 16ம் தேதிகளிலும், 4ம் கட்டமாக செப்டம்பர் 15 மற்றும் 16ம் தேதிகளிலும் நடத்தவும் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இதுபோன்ற சிறப்பு முகாம்களை முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் நடத்தாததால் ஆசிரியர்கள், அலுவலர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்படாமல் முடங்கி காணப்படுகின்றன.

மேலும், பல மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஒரு சில குறை தீர்க்கும் முகாம்கள் "பெயரளவுக்கு' மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. குறை தீர்ககும் கூட்டங்களுக்கு அனைத்து கோப்புகளும் கொண்டு வரக் கூடாது என அதிகாரிகளால் வாய்மொழியாக உத்தரவு தெரிவிக்கப்பட்டது. இதனால் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் பல்வேறு பிரச்னைகள் தொடர்ந்து தீர்க்கப்படாமலேயே உள்ளதாக புகார் கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத் தலைவர் சேதுராஜ், மாவட்ட தலைவர் ஐயாத்துரை, செயலாளர் மனோகரன், அமைப்பு செயலாளர் மாரியப்பன் கூறியதாவது: நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை முதன்மை கல்வி அலுவலரின் முதற்கட்ட சிறப்பு முகாமான கடந்த மாதம் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரையிலும், மாவட்ட கல்வி அலுவலரால் 4ம் கட்ட முகாமான கடந்த செப்டம்பர் மாதம் 15 மற்றும் 16ம் தேதிகளில் நடத்தப்பட வேண்டிய சிறப்பு முகாமும் இதுவரை நடத்தப்படவில்லை.

குறை தீர்க்கும் கூட்டங்கள் பெயரளவுக்கு நடத்தப்படாமல் ஆசிரியர்களின் பணப் பலன்கள் சார்ந்த அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும் கூட்டங்களாக நடத்தப்பட வேண்டும். குறை தீர்க்கும் கூட்டங்கள் குறைகளை களையும் கூட்டமாக பயனுள்ள வகையில் அனைத்த பள்ளி ஆசிரியர்களுக்கும் முறையாக அறிவிப்பு அளித்து நடத்தப்பட வேண்டும். அனைத்து தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளி ஆசிரியர்களின் பிரச்னைகளை தீர்க்கும் வகையில் அனைத்து கோப்புகளுடன் ஆஜராக பள்ளிக் கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக