கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

திங்கள், 30 ஜனவரி, 2012

கூடங்குளத்தில் இன்று அணுஉலை மாதிரியை எரித்து ஒப்பாரி போராட்டம்


கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடவலியுறுத்தி பொதுமக்களும், அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களும் இடிந்தகரை கிராமத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணிகள் எதுவும் நடக்கவில்லை.


ஆகையால் அணுஉலை எதிர்ப்பாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்தியஅரசு நிபுணர்குழுவை அமைத்தது. அந்த குழு போராட்டக் குழுவினரிடம் 3 முறை பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அவற்றில் உடன்பாடு ஏற்படாததால் அணுஉலை எதிர்ப்பாளர்களின் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. தொடர் உண்ணாவிரதம் நீடித்தது.
இடிந்தகரை கிராமத்தில் நடந்துவரும் அவர்களது 3-ம் கட்ட தொடர் உண்ணாவிரத போராட்டம் இன்று (திங்கட்கிழமை) 105-வது தினத்தை எட்டியுள்ளது. மேலும், இன்று காந்தி நினைவு தினம் என்பதால் அணுஉலை மாதிரியை எரித்து ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று அணுஉலை எதிர்ப்பாளர்கள் அறிவித்திருந்தனர்.
அதன்படி, அணுஉலை மாதிரியை தீவைத்து எரித்து ஒப்பாரி வைக்கும் போராட்டம் கூடங்குளத்தில் இன்று மதியம் நடக்கிறது. இதில் போராட்டக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.
இதனைத்தொடர்ந்து, மாலையில் போராட்டக் குழுவினரின் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில், மத்திய நிபுணர் குழுவினர் நாளை நடத்த இருக்கும் 4-ம் கட்ட பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதா? என்பது குறித்து முடிவு செய்யப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக