நெல்லை தச்சநல்லூர் புது அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது45). இவர் தீப்பெட்டி, மெழுகுவர்த்தி, புகையிலை, பாக்கு ஆகியவற்றை மொத்தமாக வாங்கி கடைகளுக்கு சில்லறைக்கு விற்பனை செய்து வந்தார்.
பொங்கல் பண்டிகை மறுநாளான நேற்று இவர் தனது மனைவி மாரியம்மாள் (42), மகன் சுரேஷ் (10), மகள் அபிராமி (13), அண்ணன் முருகன் (48), தாய் சங்கரம்மாள் (70), மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த குருசாமி மனைவி சந்திரா (45), மகள் மீனா (8), தங்கமணி மனைவி ஜெயலட்சுமி ஆகிய 9 பேருடன் திருச்செந்தூர் அருகே உள்ள கச்சனாவிளை வனதிருப்பதி கோவிலுக்கு ஆம்னி வேனில் சென்றார்.
வேனை சரவணகுமார் ஓட்டினார். வேன் ஸ்ரீவைகுண்டம் அருகே வந்த போது அந்த வழியே வந்த அரசு பஸ் வேன் மீது மோதியது. இதில் ஆம்னி வேன் தலைகுப்புற கவிழ்ந்து இழுத்து செல்லப்பட்டது. வேனில் இருந்த 9 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் நெல்லை சரக டி.ஐ.ஜி. வரதராஜு, தூத்துக்குடி எஸ்.பி. ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
தீயணைப்பு படை யினர் சென்று உடல்களை மீட்டனர். 9 பேர் உடலும் விபத்தில் சிக்கி சிதைந்திருந்தது. பின்னர் உடல்கள் ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரி கொண்டு வரப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் சுடுகாட்டிலேயே 9 பேர் உடலும் தகனம் செய்யப்பட்டன. விபத்தில் 9 பேர் பலியான தகவல் கிடைத்ததும் தச்ச நல்லூர் புது அம்மன் கோவில் தெரு பகுதி சோகத்தில் மூழ்கியது.
சரவணகுமார் தனது குடும்பத்தினருடன் 20 ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வந்தார்.கடின உழைப்பாளி. பல ஆண்டுகளாக வாடகை வீட்டிலேயே குடியிருந்து வந்தார். தற்போது தொழில் முன்னேற்றம் அடைந்த நிலையில் சொந்தமாக இடம் வாங்கி வீடுகட்ட திட்டமிட்டிருந்தார். மேலும் கடந்த மாதம் தான் தனது தொழில் அபிவிருத்திக்காக ஆம்னி வேன் வாங்கினார்.
பலியான சரவணகுமாரின் மகன் சுரேஷ் 2-ம் வகுப்பும், அபிராமி 7-ம் வகுப்பும் படித்து வந்தனர். விபத்தில் பலியான பக்கத்து வீட்டு பெண் சந்திராவின் தாயார் கடந்த 16 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவரை கோவிலுக்கு போக வேண்டாம் என அக்கம் பக்கத்தினர் கூறினார்களாம். அதற்கு அவர் நான் கோவிலுக்கு வெளியே நின்று சாமி கும்பிடுவேன் என கூறி சென்றாராம்.
விபத்துக்கு காரணமான அரசு பஸ்சை மார்த்தாண்டத்தை சேர்ந்த கில்பர்ட் என்பவர் ஓட்டி சென்றார். விபத்து நடந்ததும் அவர் அங்கிருந்து தப்பி விட்டார். விபத்து நடந்த இடத்தில் பெண் ஒருவர் குறுக்கே சென்றாராம். அவர் மீது மோதால் இருக்க பஸ்சை திருப்பிய போது ஆம்னி வேன் மீது மோதியதாக போலீசார் தெரிவித்தனர்.
பலியானவர்களில் சந்திரா, மீனா, ஜெயலட்சுமி தவிர மற்ற 6 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் ஆண்டு தோறும் விபத்து நடப்படும், உயிரிழப்பு ஏற்படுவதும் நடந்து வருகிறது. சாலையை விரிவுபடுத்தி விபத்து தடுப்பு முன் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்கிறார்கள் அப்பகுதியினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக