கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

புதன், 25 ஜனவரி, 2012

புளியங்குடி அருகே அரசு பஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: மர்ம கும்பலுக்கு வலை


நெல்லை மாவட்டம் புளியங்குடியில் இருந்து சுரண்டை வழியாக ஆலங்குளத்திற்கு நேற்று இரவு ஒரு அரசு பஸ் புறப்பட்டு வந்தது. அந்த பஸ் சொக்கம்பட்டி அருகே உள்ள புன்னைவனம் வந்த போது, ஒரு மர்ம கும்பல் பஸ் மீது கல்வீசி தாக்கி விட்டு, ஒரு பெட்ரோல் குண்டையும் பஸ் மீது வீசியது.
 

இதில் பஸ்சின் கண்ணாடிகள் உடைந்தன. பெட்ரோல் குண்டு பஸ்சில் விழுந்து எரிந்ததில் பஸ்சின் இருக்கைகள் தீப்பிடித்தது. உடனடியாக பஸ்சின் டிரைவர் சரவணன், கண்டக்டர் செல்வமணி மற்றும் பயணிகள் தீயை அணைத்தனர். பஸ்சில் கூட்டம் குறைவாக இருந்ததால் அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. 
 
உடனடியாக சம்பவ இடத்துக்கு எஸ்.பி.விஜயேந்திர பிதரி, டி.எஸ்.பி. ஜமீம் மற்றும் சொக்கம்பட்டி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பெட்ரோல் குண்டு வீசிய மர்ம கும்பலையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
 
அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பசுபதிபாண்டியன் கொலைக்கு கண்டனம் தெரிவித்து இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அங்கு பசுபதிபாண்டியன் ஆதரவாளர்கள் யாரேனும் உள்ளனரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.  
 
இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இரவு நெல்லை புறநகர் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இன்று அதிகாலையும் புறநகர் பகுதிக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. காலை 7 மணிக்கு பிறகே அனைத்து பகுதிகளுக்கும் வழக்கம் போல் பஸ்கள் புறப்பட்டு சென்றன
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக