கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 7 ஜனவரி, 2012

சாதாரண ஆட்டோவில் 3 பேர் ஷேர் ஆட்டோவில் 5 பேர்...! : கமிஷனர் கருணாசாகர் உத்தரவு


நெல்லையில் சாதாரண ஆட்டோக்களில் 3 பேர், ஷேர் ஆட்டோக்களில் 5 பேருக்கு மேல் ஏற்றினால் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என போலீஸ் கமிஷனர் கருணாசாகர் தெரிவித்தார்.

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் கருணாசாகர் கூறியதாவது: நெல்லையில் ரோடு விபத்துக்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டிரைவிங் லைசென்ஸ் பெறாத பள்ளி மாணவ, மாணவிகள் டூவீலர் ஓட்டக்கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தினேன். சில மாணவர்கள் டூவீலர் ஓட்டி வருகின்றனர். சீரற்ற ரோடுகளில் மாணவ, மாணவிகள் டூவீலர் ஓட்டுவது ஆபத்தானது. இதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர வேண்டும்.
ஒரு வாரத்திற்குள் பள்ளி மாணவ, மாணவிகள் டூவீலர் ஓட்டுவதை நிறுத்த வேண்டும். இல்லையெனில் லைசென்ஸ் இன்றி டூவீலர் ஓட்டியதற்காக வழக்குப்பதிவு செய்யப்படும். டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டு பெற்றோர்களை வரவழைத்து ஒப்படைக்கப்படும்.
பள்ளி ஆட்டோக்களில் கூடுதல் குழந்தைகளை ஏற்றிச்செல்வதாக புகார்கள் வந்துள்ளன. சாதாரண ஆட்டோவில் டிரைவர் மற்றும் 3 பேர், ஷேர் ஆட்டோவில் டிரைவர் மற்றும் 5 பேர் செல்லலாம் என வட்டாரப்போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார். இதன்படி ஆட்டோ டிரைவர்கள் குழந்தைகளை ஏற்றிச்செல்ல வேண்டும்.
ஒரு வாரத்திற்குள் ஆட்டோவில் கூடுதல் குழந்தைகள், நபர்களை ஏற்றிச்செல்வதை டிரைவர்கள் நிறுத்த வேண்டும். குழந்தைகளை ஏற்றிச்செல்ல மாற்று ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக குழந்தைகள், ஆட்களை ஏற்றிச்சென்றால் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.
2012ம்ஆண்டு ரோடு விபத்துக்களை குறைக்கவும், குழந்தைகள் நலன் கருதியும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு பெற்றோர்கள், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

கண்காணிப்பு தீவிரம்

பாளை., பெருமாள்புரம் பகுதிகளில் ஏற்கனவே 9 செக்டார் போலீசார் செயின்பறிப்பு கொள்ளையர்களை கண்காணிக்க 24 மணி நேர ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு செக்டாரில் 2 போலீசார் இடம் பெற்றுள்ளனர். இனிமேல் பெருமாள்புரம் பகுதியில் மேலும் 4 செக்டார் போலீசார் செயின்பறிப்பு கொள்ளையர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவர். சிறையில் இருந்து வெளியே வந்த செயின்பறிப்பு கொள்ளையர்களின் பட்டியலை பெற்று விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் செயின்பறிப்பு கொள்ளையர்கள் பிடிபடுவர்.'' என்றார்.

அனைவரும் ஒன்று தான்

கமிஷனர் கருணாசாகர் மேலும் கூறும்போது, ""நெல்லையில் தினமும் சராசரியாக ஹெல்மெட் அணியாத 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. அனைவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். போலீசாரும் டூவீலர் ஓட்டும் போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். இல்லையெனில் சார்ஜ், மெமோ அளிக்கப்படும்'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக