சங்கரன்கோவில் (தனி) சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எஸ்.முத்துச்செல்வி போட்டியிடுவார் என்று முதல்வரும் அக்கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அதிமுகவின் ஆட்சி மன்றக் குழு எடுத்த முடிவின்படி, சங்கரன்கோவில் (தனி) சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தலில்,அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவர் எஸ்.முத்துச்செல்வி நிறுத்தப்படுவார் என்று ஜெயலலிதா புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. விளையாட்டு மற்றும் இளைஞர்நலத் துறை அமைச்சராக இருந்த சொ.கருப்பசாமி கடந்த அக்டோபர் மாதம் 22-ம் தேதி காலமானார். இந்த தொகுதிக்கு ஆறு மாதக்காலத்துக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். இதற்கான தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு நடைபெறும் இரண்டாவது இடைத்தேர்தலாகும் இது. சங்கரன்கோவில் தொகுதி அதிமுகவின் கோட்டையாகும். இந்தத் தொகுதியில் சட்டப்பேரவை தேர்தலில் தொடர்ச்சியாக மூன்றுமுறை அதிமுகவே வெற்றிபெற்றுள்ளது. சொ.கருப்பசாமியே தொடர்ந்து வெற்றி பெற்று வந்துள்ளார். வேட்பாளர் விவரம்: சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் சங்கரலிங்கத்தின் மகள் எஸ்.முத்துச்செல்வி (27) பொறியியல் பட்டதாரி. இப்போது சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவராக இருந்து வருகிறார். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே அதிமுகவின் இளம்பெண்கள் பாசறையில் சேர்ந்து கட்சி பணியாற்றியவர். கணவர் முத்து மாரியப்பன். சசிகுமார்,சரவணகுமார் என இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த தேர்தல் நிலவரம்: சி.கருப்பசாமி (அதிமுக) 72,297 மு.உமாமகேஸ்வரி (திமுக) 61,902
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக