நெல்லை மாவட்டம் சுரண்டையில் இருந்து புளியங்குடிக்கு நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டு இருந்தது. புன்னைவனம் அருகே சென்ற போது திடீரென்று ஒரு மர்ம கும்பல் பஸ்சை நோக்கி பெட்ரோல் குண்டை வீசியது.
பெட்ரோல் குண்டு பஸ்சுக்குள் விழுந்து டமார் என்ற சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் பஸ்சின் சீட்டு தீயில் கருகியது. பஸ் கண்ணாடியும் உடைந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அதற்குள் அந்த மர்ம கும்பல் தப்பி ஓடிவிட்டது.
சீட்டில் பிடித்த தீயை டிரைவர் அணைத்தார். அந்த பஸ்சில் அங்கு ஒன்றும், இங்கொன்றுமாக குறைவான பயணிகளே இருந்தனர். இதனால் பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
அதைத் தொடர்ந்து பஸ்சை புளியங்குடி பணிமனைக்கு டிரைவர் ஓட்டிச் சென்றார். தகவல் அறிந்ததும் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜேயந்திர பிதரி, துணை போலீஸ் சூப்பிரண்டு ஜமீம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் குறித்து புளியங்குடியை சேர்ந்த பஸ் கண்டக்டர் சரவணன் சொக்கம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்படி இன்ஸ்பெக்டர் ஜெயராம், சப்-இன்ஸ்பெக்டர் சிவன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேற்று காலை சென்றனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாய் சோதனையும் நடத்தப்பட்டது.
அப்போது புன்னைவனம் குளக்கரையில் காலி மதுபாட்டில்களும், சிகரெட் துண்டுகளும் கிடந்தன. அதில் பதிந்து இருந்த கைரேகைகளை நிபுணர்கள் பதிவு செய்தனர். பின்னர் பாம்புக்கோவில் வழியாக வந்தனர். அப்போது பாம்புகோவில் ரெயில் நிலையம் அருகே சந்தேகப்படும்படியாக 4 பேர் நின்று கொண்டு இருந்தனர்.
இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அய்யாபுரத்தை சேர்ந்த பாலையா மகன் பிரபாகரன் (வயது 28), ராஜாமணி மகன் ராபர்ட் (21), பாண்டி மகன் செல்லத்துரை என்ற சேவியர் (34), செல்லப்பா மகன் சண்முகராஜ் (26) ஆகியோர் என்பதும், பஸ் மீது பெட்ரோல் குண்டை வீசியதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக