கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

திங்கள், 30 ஜனவரி, 2012

கடையநல்லூர் தொகுதிக்கு கூடுதலாக 100 தொகுப்பு வீடுகள் வழங்க வலியுறுத்தல்


கடையநல்லூர் தொகுதியில் பயனாளிகளுக்கு 100 தொகுப்பு வீடுகள் கூடுதலாக வழங்கிட மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தியிருப்பதாக அமைச்சர் செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.

கடையநல்லூர் தொகுதியில் கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை ஆகிய மூன்று யூனியனுக்குட்பட்ட கிராமங்கள் இடம் பெற்றுள்ளன. தென்காசி யூனியனை பொறுத்தவரை சுமார் 5 பஞ்.,கள் இடம் பெற்றுள்ள நிலையில் இத்தொகுதியில் தமிழக அரசு மூலம் வழங்கப்பட்டு வரும் தொகுப்பு வீடுகளின் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

இந்த தொகுதியை பொறுத்தவரை வறுமைக்கோட்டிற்குட்பட்ட பயனாளிகள் பட்டியலில் அதிகமானோர் இடம் பெற்றுள்ள நிலையில் கூடுதலான அளவில் தொகுப்பு வீடுகள் வழங்கிட வேண்டுமென உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதனிடையில் கடையநல்லூர் தொகுதியில் கூடுதலாக தொகுப்பு வீடுகள் வழங்கிட மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்திருப்பதாக அமைச்சர் செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: ""கடையநல்லூர் தொகுதியில் முதல்வரின் திட்டங்கள் பெருமளவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி இத்தொகுதியில் அமைந்துள்ள கிராமங்களுக்கு தொகுப்பு வீடுகள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலான வகையில் பயனாளிகள் பயன்பெறும் வகையில் வீடுகள் ஒதுக்கீடு செய்ய மக்கள் பிரதிநிதிகள் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதன்படி இத்தொகுதியில் கூடுதலாக 100 தொகுப்பு வீடுகள் வழங்கிட வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கிடைக்கப்பெறும் நிலையில் கடையநல்லூர் தொகுதிக்குட்பட்ட தென்காசி யூனியனில் அமைந்துள்ள பஞ்.,களுக்கும், கடையநல்லூர் மற்றும் செங்கோட்டை யூனியினில் உள்ள பயனாளிகளுக்கும் முறையாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக