கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 1 மார்ச், 2012

தமிழகத்தில் சாலை விபத்துக்களை தடுப்பது எப்படி?


தமிழகத்தில் சாலை விபத்துக்களை தடுப்பது குறித்து, அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்தில் தனியார் வாகன ஓட்டுனர்களுக்கு பணி நேரத்தை வரைமுறைப்படுத்த வலியுறுத்தப்பட்டது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் சாலை விபத்துக்களை தடுப்பது தொடர்பாக, அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்ட 2 நாள் ஆலோசனை கூட்டம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இமேஜ் அரங்கத்தில் நேற்று தொடங்கியது.
காவல்துறை பயிற்சி கல்லூரி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கூட்டத்தை, தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர் ஆர்.ராஜகோபால் தொடங்கிவைத்தார்.
கூட்டத்தில், காவல்துறை பயிற்சி கல்லூரி டி.ஜி.பி. லத்திகாசரண், கூடுதல் டி.ஜி.பி.க்கள் அர்ச்சனா ராமசுந்தரம், அனுப் ஜெய்ஸ்வால், ஐ.ஜி. மாசானமுத்து, 

போக்குவரத்து துறை கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா உள்பட போலீஸ் துறை, போக்குவரத்து துறை, நெடுஞ் சாலைத்துறை, மாநகராட்சி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் 90 பேர் கலந்துகொண்டனர்.

அரங்கத்தின் ஒரு பகுதியில், போக்குவரத்து விதிமுறைகள், போக்குவரத்து போலீசார் பயன்படுத்தும் பொருட்கள் அடங்கிய கண்காட்சியும் நடைபெற்றது.

கூட்டத்தை தொடங்கிவைத்து, தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர் ஆர்.ராஜகோபால்,
’’சாலை விபத்தை தடுப்பது குறித்து அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொள்ளும் கூட்டம் தமிழகத்தில் முதன்முறையாக நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் ஆண்டுதோறும் 66 ஆயிரம் சாலை விபத்துகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்தின் சராசரி 2.5 சதவீதம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தனியார் வாகன ஓட்டிகளுக்கு பணி நேரம் வரைமுறைப்படுத்தாததால், அவர்கள் அதிக நேரம் வாகனத்தை ஓட்டுகின்றனர். இதுவும் அதிக விபத்துகள் ஏற்பட காரணமாகிவிடுகின்றன. எனவே, தனியார் வாகன ஓட்டிகளுக்கும் பணி நேரத்தை வரைமுறைப்படுத்த வேண்டும்.

இதுபோன்ற கூட்டங்களில் சாலை விபத்துக்களை பற்றி விவாதிப்பதன் மூலம் இந்தியாவிலேயே விபத்து இல்லாத மாநிலமாக தமிழகத்தை விளங்கச் செய்ய முடியும்’’ என்று கூறினார்.

காவல்துறை பயிற்சி கல்லூரி டி.ஜி.பி. லத்திகாசரண் பேசும்போது, ’’சாலை விபத்துக்கள் அதிகரிப்பதற்கு விதிமுறை மீறல் ஒரு காரணமாக இருந்தாலும், ஹெல்மெட் அணியாதது, கார்களில் சீட் பெல்ட் அணியாததும் காரணமாகிறது. எனவே, பள்ளி மாணவர்கள் மூலம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்'' என்றார்.

காவல்துறை பயிற்சி கல்லூரி கூடுதல் டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரம் பேசும்போது, ``கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் வாகன விபத்துகள் அதிகரித்து வருகின்றன. 2009-ம் ஆண்டு சாலை விபத்தில் 13 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். 

2010-
ம் ஆண்டு அது 15 ஆயிரமாக அதிகரித்தது. குறிப்பாக வேலூர், விழுப்புரம், கடலூர், சேலம், தஞ்சாவூர், கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிக விபத்துகள் நடைபெறுகின்றன. எனவே, விபத்துக்களை தடுப்பது தொடர்பான இதுபோன்ற கூட்டங்களை நடத்துவது அவசியம்’’என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக