கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 10 மார்ச், 2012

ஊழல், குடும்ப ஆதிக்கம் அதிமுக ஆட்சியில் இல்லை முஸ்லிம் லீக் தலைவர் ஷேக்தாவூது

 "ஊழல், குடும்ப ஆதிக்கம் அதிமுக ஆட்சியில் இல்லை' என தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக்தாவூது தெரிவித்தார்.தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக்தாவூது நெல்லையில் அளித்த பேட்டி: உலமாக்களுக்கு பென்ஷன் உயர்வு, இலவச சைக்கிள், குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, லேப்டாப் வழங்கியது, 20 கிலோ இலவச அரிசி, மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் திட்டம் உள்ளிட்ட அதிமுக அரசின் திட்டங்கள் பாராட்டுக்குரியவை. ஊழல், ஒரு குடும்ப ஆதிக்கம் அதிமுக ஆட்சியில் இல்லை.

ஆக்ரமிப்புகளில் சிக்கிய வக்ப் வாரிய சொத்துக்கள் மீட்கப்படும் என கடந்த தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். விரைவில் வக்பு வாரிய தலைவர் நியமிக்கப்படவுள்ளார். வக்பு வாரிய சொத்துக்களை ஆக்ரமிப்பில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


"மாற்றத்தை விரும்பிய மக்களுக்கு ஏற்றம் தருவோம்' என முதல்வர் ஜெயலலிதா முன்பு அறிவித்தார். அதன்படி பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. முஸ்லிம்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் ஏற்றது அதிமுக ஆட்சி.


சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்துசெல்வியை ஆதரித்து நான் 3 நாட்கள் பிரசாரம் செய்து வருகிறேன். இத்தொகுதியில் முஸ்லிம் ஓட்டுகள் 12 ஆயிரம் உள்ளது. இந்த ஓட்டுகள் அதிமுகவிற்கு முழுமையாக கிடைக்கும் வகையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறோம்.


கடந்த ஆட்சியில் தகுந்த முறையில் திட்டமிடாததால் தற்போது தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னை உள்ளது. உடன்குடி அனல் மின்நிலைய திட்டத்தை தற்போது அதிமுக அரசு அறிவித்துள்ளது. கூடன்குளம் அணு மின்நிலையத்தை திறந்து 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கு அளித்தால் மின்வெட்டு பிரச்னை தீரும். கடன் நெருக்கடி காரணமாக பஸ் கட்டணம், மின் கட்டணத்தை அரசு உயர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
ரங்கநாத் மிஸ்ரா, சச்சார் கமிட்டி பரிந்துரைப்படி முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் மத்தியில் 10 சதவீதம், மாநிலத்தில் 7 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். இடஒதுக்கீட்டை பெற்றுத்தர துணை நிற்போம்.


சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்துசெல்வி 40 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபட்டு வருகிறோம். மாநில அமைப்பு செயலாளர் அப்துல்கபூர் தலைமையில் 2 குழுவினர் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபடுவர்.

இவ்வாறு ஷேக்தாவூது தெரிவித்தார்.

மாநில அமைப்பு செயலாளர் அப்துல்கபூர், மாவட்ட தலைவர் அப்துல்ரசாக், துணைத்தலைவர் மதார்மைதீன், செயலாளர் முகமதுரபீக், பொருளாளர் அசன்மைதீன், துணை செயலாளர் ரசூல்மைதீன், இளைஞரணி செயலாளர் அல்லாபிச்சை, தொண்டரணி செயலாளர் ஜாபர்அலி, வக்கீல் பிரிவு செயலாளர் செய்யது அசன்அலி, ஆலோசனைக்குழு பொறுப்பாளர் ஷேக்முகமது உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக