கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வெள்ளி, 2 மார்ச், 2012

கடையநல்லூர் பகுதியில் பிசான சாகுபடி அறுவடை தீவிரம்

கடையநல்லூர் பகுதியில் பிசான சாகுபடி அறுவடை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் வெளி மாநிலங்களுக்கு நெல் மூடை மூடைகளாக கொண்டு செல்லப்படுகிறது. ரூ.750ல் இருந்து 850 வரை நெல் விற்பனை செய்யப்படுகிறது.நெல்லை மாவட்டத்தில் பிசான சாகுபடி பல ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் மேற்கொள்ளப்பட்ட நிலையில் சாகுபடிக்காக இந்த ஆண்டு அனைத்து அணைக்கட்டுகளிலிருந்தும் முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முன்கூட்டியே தண்ணீர் திறந்திட ஏற்பாடு செய்யப்பட்டது. 

பருவமழையை எதிர்பார்த்த நிலையில் பிசான சாகுபடி சில நாட்களுக்கு பிறகு பெரும்பாலான ஏக்கர் நிலப்பரப்பில் காலதாமதமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில் கிணற்று நீரை பயன்படுத்தி நெற்பயிர்கள் விளைவதற்கு விவசாயிகள் ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.இதனிடையில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகி அதற்கான பணிகள் ஆங்காங்கே முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நெல் அறுவடை இயந்திரங்களை கொண்டு அறுவடை பணிகள் தீவிரமாகி வரும் நிலையில் அறுவடை செய்த இடத்திலேயே நெல் மூடைகளை விலை பேசுவதற்கு புரோக்கர்கள் வயல்வெளி பகுதிகளில் முகாமிட்டுள்ளதை காண முடிகிறது. உள்ளூர் வியாபாரிகளை விட வெளிமாவட்ட வியாபாரிகள் அறுவடை செய்த நெல்களை விலை பேசி எடுத்து செல்வதையும் காண முடிகிறது.கர்நாடக மாநிலம் தும்கூர் வழியாக பாம்பே, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு நெல் மூடைகள் அனுப்பபடுவதாக பரவலாக கூறப்படுகிறது. அதிகமான அளவில் கர்நாடகாவில் இருந்து நெல்கள் அனுப்பபட்ட நிலையில் இந்த ஆண்டு அந்த மாநிலத்தில் போதுமான விளைச்சல் இல்லாத காரணத்தை முன்னிட்டு அம்மாநிலத்தை சேர்ந்த நெல் வியாபாரிகளும், புரோக்கர்களும் தமிழகத்தில் குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள கடையநல்லூர், புளியங்குடி, வாசுதேவநல்லூர், செங்கோட்டை, இடைகால் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடை செய்த நெல்களை டாரஸ் கனரக வாகனத்தில் எடுத்து செல்வதை பரவலாக காண முடிகிறது.இதனிடையில் ஒரு மூடை நெல் ரூ.750ல் இருந்து 800 வரை விலை பேசப்பட்டு வருவதாகவும், மூடை ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்க கூடிய நிலையில் அதனை முறையாக பாதுகாக்க முடியாததால் நெல்களை அந்த இடத்திலேயே கொடுக்க கூடிய நிலை இருப்பதாகவும் விசாயிகள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர். பிசான சாகுபடிக்காக பயன்படுத்தப்பட்ட உரங்களுக்கு செலவு செய்த தொகையை கூட பெறுவதற்கு முடியவில்லை என்று பெரும் ஏக்கத்துடன் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக