கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 3 மார்ச், 2012

கடையநல்லூர் ரெயில் நிலையத்திற்கு அருகே பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண்ணின் கழுத்தை அறுத்து நகை கொள்ளை: கொள்ளையனை போலீசார் விரட்டி பிடித்தனர்


கடையநல்லூர் ரெயில் நிலையத்திற்கு அருகே பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண்ணின் கழுத்தை அறுத்து நகை கொள்ளை: கொள்ளையனை போலீசார் விரட்டி பிடித்தனர்

சென்னையை சேர்ந்தவர் கணேசன். அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள் (வயது30). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மாரியம்மாள் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம். நேற்று கணேசன் தனது மனைவி, குழந்தைகளுடன் அம்பாசமுத்திரத்திற்கு புறப்பட்டார்.
 
மதுரை- கோவில்பட்டி வழியாக செல்லும் ரெயில்களில் இடம் இல்லாததால் செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டனர். இன்று காலை கடையநல்லூர் ரெயில் நிலையத்திற்கு ரெயில் வந்தது. கடையநல்லூர் ரெயில் நிலையத்தை தாண்டி மங்களாபுறம் அருகே செல்லும் போது மாரியம்மாள் ரெயில் பெட்டியில் உள்ள கழிவறை அறைக்கு சென்றார்.
 
அப்போது அங்கு மறைந்து இருந்த மர்ம நபர் ஒருவன் மாரியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றான். உடனே மாரியம்மாள் சத்தம் போட்டாள். இதனால் ஆத்திரம் அடைந்த அவன் கத்தியால் மாரியம்மாள் கழுத்தை அறுத்தான். ரத்த வெள்ளத்தில் மாரியம்மாள் கீழே விழுந்தாள்.
 
அவரது அலறல் சத்தத்தை கேட்டு ரெயில் பயணிகள் பாத்ரூம் அறைக்கு ஓடி வந்தனர். அங்கு மாரியம்மாள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதையும் ரத்தம் படிந்த கத்தியுடன் நின்ற மர்ம மனிதனை பார்த்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவனை பயணிகள் பிடிக்க முயன்றனர்.
 
ஆனால் அவன் கத்தியை காட்டி பயணிகளை மிரட்டினான். பயணிகள் ரெயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். ரெயில் பாதுகாப்புக்கு வந்த போலீசாருக்கும் உடனடியாக தகவல் தெரிவித்தனர். ரெயில் நின்ற போது மர்ம மனிதன் ரெயிலில் இருந்து குதித்து காட்டு பகுதி வழியாக தப்பி ஓடினான். பாதுகாப்பு பணிக்கு வந்த ரெயில்வே போலீசார் ராய் ரவிக்குமார் ஆகியோர் தப்பி ஓடிய மர்ம மனிதனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
 
மங்களாபுரம் ரெயில்வேகேட் அருகே நின்ற தேனி செல்லக்கூடிய பஸ்சில் ஏறி மர்ம நபர் தப்பி சென்றான். இதுகுறித்து உடனே கடையநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெயராமன்,
சப்-இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி ஆகியோர் ஜீப்பில் பஸ்சை துரத்தி சென்றனர். பஸ்சை மறித்து நிறுத்தி பார்த்த போது அங்கு ரத்தம் படிந்த சட்டையுடன் கொள்ளையன் இருந்தான்.
 
பஸ்சில் கொள்ளையன் பயணம் செய்து வந்ததை அறிந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். போலீசார் கொள்ளையனை பிடித்து விசாரணையில் நடத்தினர். விசாரணையில் அவன் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் புத்தூரை சேர்ந்த கருப்பசாமி மகன் அலெக்சாண்டர் (வயது29) என்பது தெரியவந்தது.
 
அவனை போலீசார் கைது செய்து அவனிடமிருந்த கத்தியை பறிமுதல் செய்தனர்.   இதனிடையே கத்தியால் கழுத்து அறுக்கப்பட்டு காயம் அடைந்த மாரியம் மாளை ரெயில்வே போலீசார் கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக