கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

ஞாயிறு, 18 மார்ச், 2012

சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு: ஓட்டளித்த வைகோ & முத்துச்செல்வி



நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் ( தனித்தொகுதி) இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று பலத்த பாதுகாப்புடன் துவங்கியது, காலை முதல் வாக்காளர்கள் விறு, விறுப்பாக ஓட்டளித்து வருகின்றனர். முன்னதாக மாதிரி ஓட்டுப்பதிவு நடந்தது. கலிங்கப்பட்டியில் ஓட்டளித்த ம.தி.மு.க, பொதுசெயலர் வைகோ விடியலை நோக்கி, ஓட்டளிப்பதாக கூறினார்.

இந்த தொகுதியில் தற்போது வேட்பாளர்களாக முத்துச்செல்வி ( அ.தி.மு.க.,), ஜவஹர் சூர்யகுமார் ( தி.மு.க.,), முத்துக்குமார் ( தே.மு.தி.க.,) சதன் திருமலைக்குமார் ( ம.தி.மு.க.,) முருகன் ( பா.ஜ.,) உள்ளிட்டோர் களத்தில் நிற்கும் முக்கியஸ்தர்கள். சமாஜ்வாடி மற்றும் இந்திய ஜனநாயக மக்கள் கட்சி மற்றும் 6 சுயேட்சைகள் சேர்த்து 13 பேர் களத்தில் உள்ளனர்.

இன்று ஓட்டுப்பதிவு நடக்கும் சங்கரன்கோவில் தொகுதி 24 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 242 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2 லட்சத்து 6 ஆயிரத்து 87 வாக்காளர்கள்களில் ஆண்கள் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 21, பெண்கள் ஒரு லட்சத்து மூவாயிரத்து 166 பேர் உள்ளனர். 21 சாவடிகள் பெண்களுக்கான தனிச்சாவடிகளாகும். தேர்தல் பார்வையாளர் கவுதம், எஸ்.பி.,விஜயேந்திர பிதரி ஆகியோர் முன்னின்று போலீசார், மற்றும் துணைராணுவ படையினருக்கு பணியாற்றவேண்டிய விதிமுறைகளை தெரிவித்து கண்காணித்து வருகின்றனர்.

88 ஓட்டுச்சாவடிகள் பதட்டமானவை : மத்திய தொழில்பாதுகாப்பு படையினர், மத்திய ரிசர்வ் படையினர் 5 கம்பெனிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பதட்டமானவையாக கருதப்படும் 88 ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்படுகின்றனர்.

கலிங்கப்பட்டியில் ஓட்டளித்தார் வைகோ :இடைத்தேர்தல் நடக்கும் சங்கரன்கோவில் தொகுதிக்குட்பட்ட கலிங்கப்பட்டியில் ம.தி.மு.க,. பொதுசெயலர் வைகோ தனது ஓட்டை பதிவு செய்தார். இங்குள்ள ஓட்டுச்சாவடி எண் - 120 க்கு காலை 9 மணிக்கு வந்தார். இவருடன் மகன் துரைவையாபுரி, தம்பி ரவிச்சந்திரன், மருமகன் ஜெகதீசன், மற்றும் உறவினர்கள், கட்சி தொண்டர்களுடன் வந்திருந்தார். வரிசையில் காத்து நின்று ஓட்டளித்தார். ஓட்டளிக்கும் முன்னதாக நிருபர்களிடம் பேசிய வைகோ; ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து வருகிறது. எனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் எனது தம்பி ரவிச்சந்திரன் போட்டியிட்டார். அந்நேரத்தில் ராஜிவ் கொலையில் தொடர்பான சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் வழக்கு தொடர்பாக நான் டில்லிக்கு செல்ல வேண்டியிருந்தது. எனவே அப்போது நான் ஓட்டளிக்க முடியவில்லை. இன்று ஊழற்ற ஆட்சிக்கும், ஜனநாயகம் மலர்ந்திட, விடியலை நோக்கி நான் ஓட்டளிக்கிறேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக