கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 3 மார்ச், 2012

சங்கரன்கோவிலில் முஸ்லிம்களிடம் ஆதரவு திரட்டிய அமைச்சர்கள்

சங்கரன்கோவில் தொகுதியில் முஸ்லிம் சமுதாயத்தினரின் ஆதரவை பெறும் வகையில் நேற்று கொளுத்தும் வெயிலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர்கள் தீவிர பிரசாரம் செய்தனர்.

சங்கரன்கோவில் தொகுதி இடைத் தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. தொகுதியில் ஒவ்வொரு சமுதாயத்தினரின் ஆதரவுகளை பெற கட்சிகளுக்கு இடையே கடும் போட்டோ போட்டி ஏற்பட்டு வருகிறது.
சங்கரன்கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு தரப்பினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இடைத் தேர்தலையொட்டி உடனடியாக இப்பிரச்னையை சுமூகமாக முடிக்க ஆளுங்கட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.


இந்த சூழ்நிலையில் தற்போது தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் தொகுதியில் சிறுபான்மை சமுதாயமான முஸ்லிம்களின் ஆதரவை பெற அதிமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் முஸ்லிம் நிர்வாகிகள் தேர்தல் பணிக் குழுக்களில் இடம் பெற்றுள்ளனர். இக் குழுக்கள் மூலம் இச்சமுதாயத்தினரின் ஆதரவை பெற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.


இதற்கிடையில் வெள்ளிக்கிழமையான நேற்று சங்கரன்கோவில் பள்ளி வாசலில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தினர். இதில் பங்கேற்கும் முஸ்லிம் சமுதாயத்தினரிடையே தீவிர பிரசாரம் செய்ய அதிமுக அமைச்சர்கள் முடிவு செய்தனர்.


இதனால் நேற்று மதியம் சுமார் 1.30 மணிக்கு பள்ளி வாசல் அருகில் அமைச்சர்கள் செங்கோட்டையன், செந்தூர் பாண்டியன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, சுந்தர்ராஜ், முகம்மது ஜான், தேர்தல் பணி குழு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுக வேட்பாளர் முத்துசெல்வி மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் வந்தனர்.


தொழுகை முடியாத நிலையில் உடனடியாக காயிதே மில்லத் 2வது தெருவில் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கொளுத்தும் வெயிலில் "திடீர்' பிரசாரத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தெரு ஓரத்தில் நாற்காலிகளில் அமர்ந்து ஆலோசனை நடத்தி கொண்டிருந்தனர்.
பின்னர் தொழுகை முடிந்து வெளியே வந்த முஸ்லிம்களிடம் அதிமுக அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்தனர்.
இதில் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் தமிழ் மகன் உசேன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஷமீம் இப்ராகிம், நிர்வாகிகள் சுலைமான், தாஸ், ஷியாம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக