மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளதால், "இன்வெர்ட்டர்' பேட்டரிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
தற்போது, வெயில் காலம் துவங்கி உள்ளதால், மின்சாரம் இல்லாமல் பெரிதும் சிரமப்படும் மக்கள், வசதியான வீடுகளில் மட்டும் காணப்பட்ட ஜெனரேட்டர், இன்வெர்ட்டர் போன்றவற்றை வாங்க துவங்கி உள்ளனர்.அதுவும், புறநகர் பகுதிகளில் மின்வெட்டு நேரம் அதிகமாகி உள்ளதால், அங்கு இன்வெர்ட்டர் விற்பனை சூடுபிடித்து உள்ளது. ஜெனரேட்டர் வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் கூட, எரிபொருள் விலை காரணமாக, இன்வெர்ட்டரையே விரும்புகின்றனர்.இதனால், அடிப்படை வசதி உள்ள இன்வெர்ட்டரின் விலை, 10 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்ந்து உள்ளது.இன்வர்ட்டர்களில், பேட்டரி மற்றும் மின் மாற்று கருவி என, இரண்டு பாகங்கள் உள்ளன.
தமிழகத்தில், மின் மாற்று கருவிகளை தயாரிக்கும் நிறுவனங்கள் பல மூலைகளிலும் முளைத்துள்ளன.ஆனால், இவற்றிற்கான பேட்டரிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மின்வெட்டு பிரச்னையால், பேட்டரி தயாரிப்பு அளவும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. பல கடைக்காரர்கள், தங்களுக்கு 30 பேட்டரி வேண்டும் என்று ஆர்டர் செய்தால், மூன்று பேட்டரிகள் கூட சப்ளை செய்யப்படுவதில்லை என்று கூறுகின்றனர். இதனால், கடும் போட்டியில் இன்வெர்ட்டர்கள் விற்கப்படுகின்றன. விற்பனை அதிகரித்து வரும் நேரத்தில், தேவைக்கு ஏற்ப பேட்டரிகள் கிடைக்காததால், சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சம்பாதிக்க முடியாமல் கடைக்காரர்கள் தவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக