கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 13 மார்ச், 2012

கடையநல்லூரில் போலி ஆவணம் மூலம் வீட்டுமனை விற்று ரூ. 2 கோடி மோசடி

கடையநல்லூர் அருகே போலி ஆவணம் மூலம் வீட்டுமனை விற்று ரூ. 2 கோடி மோசடி செய்தோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப் பகுதியைச் சேர்ந்தோர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர்.


தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவைத் தலைவர் தங்கய்யா, பொதுச்செயலர் ஜாபர் அலி ஆகியோர் தலைமையில் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 200 பேர் திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.


அவர்கள் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சந்திரசேகரனிடம் அளித்த மனு:
கடையநல்லூரில் இருந்து 2 கிமீ தொலைவில் தென்காசி-மதுரை சாலையில் 3,786 வீட்டுமனைகளுடன் பிரம்மாண்ட நகர் உருவாகி வருகிறது.
பள்ளி, மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும் எனக் கூறி சிலர் விளம்பரம்செய்தனர்.


இதை நம்பி கடையநல்லூர், புளியங்குடி, ராஜபாளையம், வாசுதேவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 500 பேர் 1,500 வீட்டுமனைகளை வாங்கினர்.
ஒரு வீட்டுமனை ரூ. 13,500 என விற்கப்பட்டது.


இதன் மூலம் ரூ. 2 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளது.
நிலத்தை வாங்கியோர் அங்கு சென்று வீடு கட்ட முயன்றபோது நிலத்தில் வில்லங்கம் இருப்பது தெரியவந்தது.


இது தொடர்பாக நிலத்தை விற்றோரிடம் கேட்டபோது, 4 மாதங்களில் பிரச்னை தீர்க்கப்படும் என்றும் இல்லையெனில் பணம் திருப்பித் தரப்படும் என்றும் உறுதியளித்தனர்.
ஆனால், 4 மாதங்கள் ஆகியும் பணத்தைத் திருப்பித் தர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இப் பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு போலி ஆவணங்கள் மூலம் வீட்டுமனை விற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு பணம் கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என்றனர் அவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக